வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேலும் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு ‘கனமழை’ தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளதாவது,
“தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழகக் கரையைக் நெருங்கக் கூடும்.
இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கன மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, நெல்லை கடலூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.