சென்னையில் இன்று 3 வது நாளாக கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,:
“ஸ்மார்ட் சிட்டி என்று விளம்பரப்படுத்திக் கொண்டார்கள், அதில் கொள்ளையடித்திருக்கிறார்கள். பின்பு, மழைநீர் வடிகால் வசதி என்று சொல்லி அந்தத் துறையின் அமைச்சர் சொல்லமுடியாத அளவிற்கு அதைப் பயன்படுத்தி அதிலும் கொள்ளையடித்திருக்கிறார். போன மழையில் பாதிக்கப்பட்ட இடங்களை சீர்படுத்தவேண்டும் என்று ஏற்கனவே கிட்டத்தட்ட 5000 கோடி ரூபாய் நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்த மாதிரி தெரியவில்லை.
ஐஏஎஸ் அதிகாரிகளை நியமன விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளாரே?
அவர் பொய் சொல்வதற்கே பிறந்திருக்கிறார். இப்படித்தான் தேர்தல் நேரத்திலும் பொய் சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது தேர்தல் முடிந்தபிறகு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார். அந்த வெறுப்பில், திமுக அரசு இவ்வளவு வேகமாகப் பணி செய்துகொண்டிருக்கிறார்களே என்று கடுப்பில், அவர் திடீரென்று வந்து ஒரு ஷோ காண்பித்து, இப்படி எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் சேவை மக்கள் பணி, மக்களுக்கான பணிகள். நேரடியாகப் போகிறோம், மக்களைச் சந்திக்கிறோம், என்ன குறை என்று கேட்கிறோம். அதற்கு வேண்டியதைச் செய்து வருகிறோம்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி, அமைச்சர் மீது விசாரணை கமிஷன் பாயுமா?
‘தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர். முறையாக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. மத்திய அரசிடமிருந்து திட்டத்திற்காக நிதி பெற்றும் பணிகள் நடைபெறவில்லை. எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் விசாரித்து நிச்சயமாக, உறுதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்