ஜி.எம்.ஏ.பிலிம்ஸ் படநிறுவனம் சார்பில், ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் ஆகியோர் தயாரித்துள்ள புதிய படம்,’கிராண்மா.ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில், சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.இவர்களுடன் மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ள இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின்.
இப்படம் குறித்து இயக்குனர் ஷிஜின்லால் எஸ்.எஸ் கூறியதாவது,”எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும்.ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும் .இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் ‘கிராண்மா’ என்கிற பெயரில் உருவாகியுள்ளது.
கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது .இதன் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளோம்.
கதையிலும் காட்சியமைப்பிலும் மிகவும் ஒன்றிப்போன நாயகி சோனியா அகர்வால் ,சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார்.சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.
திகில் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ‘கிராண்மா’ விரைவில் திரையில் ரசிகர்களைப் பயமுறுத்த வருகிறது என்கிறார்.இப்படத்தின் ஒளிப்பதிவை,யஸ்வந்த் பாலாஜி கவனிக்க,சங்கர் ஷர்மா இசையமைத்து வருகிறார்.