சென்னையை மிரட்டிய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக கரையை கடக்க தொடங்கியது. சென்னை அருகே இரண்டு மணி நேரத்தில் தாழ்வு மண்டலம் 45 முதல் 55 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.இது மேலும்,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நாளை வலு இழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பால்சந்திரன் கூறியதாவது;
“குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது. அடுத்த 2 மணி நேரத்திற்கு இதே நிலை தொடரும். அதி கனமழைக்கான வாய்ப்பு குறைந்து உள்ளகாற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கரையை கடந்து வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை முழுவதுமாக கடந்து செல்ல 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும்.சென்னைக்கு அதி கனமழைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
அதே சமயம், காற்று மற்றும் கனமழைக்கான அலர்ட் தொடர்கிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்“.இவ்வாறு அவர் கூறினார்