
விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது, காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை.
சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். இங்கு பேசும்போது காவல் துறைக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் நாடு என்ன மாதிரி பிரச்சனையை சந்திக்கும் என்பதை சொன்னார்கள். அதையே நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். காவல் துறையின் சேவை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிடவேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். எங்களை நேசியுங்கள்.
காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட்டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மக்கள் சேவையில் இருப்பார்கள். காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். இதற்கு யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை புனிதமான துறை. உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்த்தெடுங்கள்’ என்றார்.