நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளியையொட்டி ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ திரைப்படம் வெளியானது.இப்படம் பழங்குடியின மக்கள் குறிப்பாக, இருளர் மக்கள் பற்றி பேசும் இப்படம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக முதல்வர் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் சூர்யாவை பாராட்டி வருகின்றனர் இந்நிலையில், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கைக்கு நடிகர் சூர்யாவும் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் பேசியதற்கு நடிகை ரோகினி தனது ட்விட்டர் பக்கத்தில்,”சக நடிகர் சூர்யாவுக்கு எதிராக மயிலாடுதுறை மாவட்ட பாமக செயலாளர் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பாமக தலைவர் சுட்டிகாட்டியதற்காக நாளேட்டில் வந்த படத்தை மாற்றியுள்ளார்.கருத்தை கருத்துக் கொண்டு எதிர்கொள்ளாமல், சூர்யாவுக்கு எதிராக வன்மத்தை தூண்டுவதை நான் கண்டிக்கிறேன்”. என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.