சென்னையைச் சேர்ந்த நாயகன் லிங்கேசன் (விக்ரம்) ஒரு பாடி பில்டர். பிரபல நிறுவனங்களின் மாடல் அழகி (தியா) எமி ஜாக்சனின் தீவிர ரசிகன்.. மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்று மிஸ்டர் இந்தியாவாகத் துடிக்கும் ஆணழகனான லிங்கேசனின் உதவி ஒரு கட்டத்தில் எமிக்கு தேவைப்படுகிறது. தன்னை படுக்கைக்கு அழைக்கும் சக மாடலான உபேன் பட்டேலிடமிருந்து தப்பிக்க, அவனுக்கு பதில் லிங்கேசனை மாடலாக நடிக்க சீனாவுக்கு கூட்டிச் செல்கிறார். அங்கு எமியுடன் நடிக்க சங்கோஜப்படும் ‘லீ’ யை சகஜமாக்க, காதலிப்பது போல நடிக்கிறார். இதற்கிடையே இந்த விளம்பரப் படத்துக்காக வரும் மேக்கப் நிபுனி? திருநங்கை ஓஜாஸ் விக்ரமின் கட்டழகில் மோகம் கொள்கிறார். அதன் காரணமாக எமியின் பின்னால் சுற்றும் லீயை எமி , உண்மையாக காதலிக்கவில்லை என்ற உண்மையைலிங்கேசனிடம்சொல்லி விடுகிறாள் . உண்மை தெரிந்து மனம் நொந்தாலும், லீ பிறகு சமாதானமாகி விடுகிறான் இதற்கிடையே தன் வாய்ப்பை தட்டி பறித்த லீயை பழிவாங்க மாடல் அழகன் உபேன் பட்டேல், சீனாவிலேயே லீயைக்கொல்ல,ஆட்களை அனுப்புகிறான். அவர்களுடன் சண்டைப் போட்டு விரட்டியடிக்கும் லீ மீது எமிக்கு தானாக காதல் வருகிறது . லீ-தியா இருவரும் புகழ்பெற்ற மாடலாக வலம் வரும் தருணத்தில் திருமணம் செய்ய முடிவெடுகிறார்கள். நிச்சயதாதமும் நடக்கிறது. அப்போதுதான் லீ மெல்ல மெல்ல தன் உடல் கட்டை இழந்தும் முகமெல்லாம் விகாரமாகி, கூன் விழுந்து ஆளே படு கோரமாகிப் போகிறான். இது ஏன் ? யாரால் ஏற்படுகிறது ?என்பது தான் திரைக்கதையாக்கப்பட்டுள்ளது. திருமணக்கோலத்திலிருக்கும் எமி ஜாக்ஸனை, கூனன் விக்ரம் கடத்தும் முதல் காட்சியிலேயே நம்மை காட்சிக்குள் இழுத்து கொண்டு போய் விடுகிறார் ஷங்கர். பின்னர் ஃபிளாஷ்பேக்காக விக்ரம் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ அவதாரம் எடுப்பது, மாடலாக மாறுவது, எமியுடன் காதல் செய்வது என முதல் பாதி மிக மெதுவாக பயணிக்கிறது. இடைவேளைக்குப் பின்னர் கொஞ்சம் வேகமெடுக்கும் திரைக்கதை, விக்ரமின் பழிவாங்கல் நடவடிக்கையின்போது சிறிது விறுவிறுப்பை கூட்டுகிறது. சேது,பிதாமகன்,அந்நியன் என ரசிகர்களின் இதயத்தில் வாழ்ந்த விக்ரம் ,இதில் சிம்மாசனமே போட்டு அமர்ந்து விடுகிறார். உடம்பெல்லாம் கொப்புளத்துடன் , முதுகு வளைந்து முக்கால் கிழவனாகி , அவரை பார்க்கவே பயமாக இருக்கிறது .படத்தில் வரும் ஒரே ஒரு காட்சிக்காக நைந்து துவண்டு உடல் துரும்பாகி, நமக்கு கண்ணீரே வந்து விடுகிறது.நான்கு வித கெட்டப்களில் வரும் விக்ரமின் ஒப்பனை பிரமிக்க வைக்கிறது.அபாரம் ! அடுத்த முதலவர் தான் தான் என்ற கனவில் வாழும் நடிகர்களுக்கு மத்தியில் விக்ரமின் துணிச்சல் .அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும் . ஆனால் ஓவர் டோஸாக இருப்பதால் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பது தெரிய வில்லை . எமி சரியான தேர்வு. படத்தின் முதுகெலும்பாக நிற்பது பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும்,ஏ .ஆர். ரகுமானின் பின்னணி இசையும் தான். நான் மெரசலாயிட்டேன் படம் முடிந்த பின்னரும் நம்மை முனுமுனுக்க வைக்கிறது. நடிகர் திலகத்தின் மூத்த வாரிசு,ராம்குமார் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படியொரு கேரக்டரை ஏற்று ஏன் நடித்தார் என்பது புரியாத புதிர்! சந்தானம் நிறைவு. சீனாவில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சிகள் , ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் மிங்கின் மாஸ்டர் மைன்ட். பாராட்டுக்கள்! விக்ரமை விரட்டி விரட்டி காதலிக்கும் திரு நங்கை காட்சிகள் அருவெருப்பின் உச்சம். படத்தின் முன்பாதி,பின்பாதி ஆங்காங்கே பலமாக ‘கத்தரி ‘ வைத்திருந்தால் இன்னொரு தடவை பார்க்கலாம் என்ற சிந்தனை வந்திருக்குமோ என்னமோ! மொத்தத்தில் இதற்கு ஷங்கர் இரண்டரை வருட கால உழைப்பை வீணடித்திருக்க வேண்டாமே என்றே தோன்றுகிறது!
Rating – 3/5