‘தப்புத் தண்டா’ படத்தினை இயக்கிய ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘வனம்.’ இப்படத்தில் வெற்றி, ஸ்மிருதி வெங்கட், அனு சித்தாரா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
‘தப்புத் தண்டா’ படத்தில் நடித்த ஹீரோயின் ஸ்மிருதி வெங்கெட் இந்தப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில் கிரேஸ் ஜெயந்தி ராணி, ஜே. பி அமலன், ஜே.பி அலெக்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஒளிப்பதிவு: விக்ரம் மோகன், இசை: ரான் ஈத்தன் யோஹான், எடிட்டிங் : பிரகாஷ் மப்பு.
‘மறுபிறவி’, மாயக்கண்ணாடி போன்ற அமானுஷ்யமான விஷயத்தை மைய்யப்படுத்தி உருவாகியிருக்கும் ‘வனம்’ எப்படியிருக்கிறது?
ஒரு ஓவியக்கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில், குறிப்பிட்ட ஒரு அறைக்குள் தங்குபவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அதே அறையில் தங்கியிருக்கும் வெற்றிக்கும் அது ஒருவிதமான பயத்தை கொடுக்கிறது. இதை கண்டுபிடிக்க தன்னுடைய காதலி, ஸ்மிருதி வெங்கெட்டுடன் முயற்சிக்கிறார், வெற்றி. அப்போது பல திடுக்கிடும் விஷயங்கள் வெளியே வருகிறது. அது என்ன விஷயங்கள் என்பதை, சற்றே சுவாரஸ்யம் கலந்த திரைக்கதையில் விவரித்திருக்கிறார்கள்.
ஒரு ‘சைக்கோ ஜமீன்’ மறுபிறவி எடுக்கும் திகில் கதை. படம் ஆரம்பித்தவுடன் திகிலுடன் சீரான வேகத்திலேயே செல்கிறது, ஆங்காங்கே சில தொய்வுகளுடன். சில காட்சிகள் சுவாரஸ்யமற்ற விதத்தில் பயம் ஏற்படுத்தவில்லை.
முக்கியமாக ஜமீந்தாரை ‘அடுத்தபிறவியில் பழிவாங்கியே தீருவேன்’ என சபதமெடுக்கும் பெண், அதற்கான முயற்சியை விட்டுவிட்டு நிற்பது அபத்தம். அதோடு தாங்கள் மதிக்கும் பெண்ணை நாசபடுத்தியவனை பழி தீர்க்காமல் சும்மா வீடியோ பார்ப்பவனையும், போதை பொருள் பயன்படுத்தியவனையும் கொல்வது, எந்த விதத்தில் நியாயம்?
யூகிக்க முடியாத சில ட்விஸ்ட்டுகளை ரசிக்கமுடிகிறது.
காடுகளின் அழகை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், பின்னணி இசையமைத்த ரான் ஈத்தன் யோஹான் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். அதே போல் கிராபிக்ஸ் டீமையும் பாராட்ட வேண்டும்.
திகிலூட்டும் ஒரு கதையை யோசித்துவிட்டு, திரைக்கதையில் சொதப்பியுள்ளனர்.