மக்கள் இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன். இவரது ‘அங்காடித் தெரு ‘ வெயில் ‘ இரு படங்களும் நாட்டு நடப்புகளை அஞ்சாமல் சொன்ன கருத்தாழம் மிகுந்த படங்கள்.
‘ஜெயில் ‘எப்படி ?
இது வசந்த பாலனின் கதை இல்லை. புகழ் மேடையில் அமர்ந்துள்ள 3 எழுத்தாளர்கள் கூடி அமைத்த கதை.
சேறு ,குப்பை ,கால்வாய் ,கொசு என கழிவுகளின் மத்தியில் வாழ்ந்த மக்களை சென்னையின் வெளிப்புற பகுதியில் வீடுகளை கட்டி குடியமர்த்திய கண்ணகி நகர் பிள்ளைகளின் வாழ்வியலை சொல்கிற கதை.30 கிலோ மீட்டர் தொலைவு.!
சேரியில் வாழ்ந்தவர்களை அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தினாலும் வாழ்க்கை நிலை உயராது.அவர்களது மனநிலையும் மாறாது. அவர்களது வாழ்விடங்களை விட்டு மாற்றியதால் அவர்களுக்கு பிழைக்கிறவழி தெரியவில்லை என வக்காலத்து வாங்குகிற கதை .!அதனால் முந்தைய சேரி வாழ்க்கையையே தொடர்வதாக சொல்லுகிறார் வசந்த பாலன்.
ஒரு நகர் சென்னைக்கு வெளியில் அமைக்கப்படுகிறபோது அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லையா ,இதனால்தான் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா, என்பதை சொல்லாமல் நகர் மாற்றமே தவறு என்பதைப்போல கதை அமைந்திருக்கிறது.
மேலும் சேரி வாசிகள் என்றால் கஞ்சா விற்பதுதான் அவர்களது தேசியத் தொழில் என்பது!! ,வசந்தபாலன் நீங்களுமா?
அடிப்படையே தவறு.
இந்த பிழையில் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் கர்ணா ( ஜீவி பிரகாஷ்.) பாப்பம்மா ( ராதிகா சரத்குமார்.)கலை ( பசங்க பாண்டி ) ராக்கி (நந்தன் ராம் ),ரோசா மலர் ( அபர்நதி ) உள்ளிட்ட அத்தனை கேரக்டர்களும்.!
ஒரே பகுதியை சேர்ந்தவர்களுக்கு மத்தியில் கஞ்சா விற்பதில் ஏரியா பிரச்னை. மோதல் ,குத்து ,வெட்டு ,கொலை இவைகளுடன் காதலும் வளர்கிறது.
நடிப்பதில் ஜிவி பிரகாஷ்.அந்த கேரக்டருடன் பொருந்திப்போகிறார். அந்த அளவுக்கு கர்ணா கேரக்டரை வாழ வைத்திருக்கிறார்.ஆனால் இதை தொடர்வார்களா ? வெறுப்பாகிறது.!
அதுவும் உலகநாயகன் கமல்ஹாசனின் முத்த வாரிசாக வளர்வதில் அவ்வளவு இஷ்டமா? அபர்நதியின் உதடுகள் காய்ந்து போகும் அளவுக்கு சப்பி எடுத்து விடுகிறார்.அபர்நதியின் இயல்பான நடிப்பு.!
இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் அறிமுகப்படம். ராக்கியாக நடித்திருக்கிறார். பசங்க பாண்டிக்கும் நல்ல வாய்ப்பு.!
பாப்பம்மா கேரக்டருக்கு ராதிகா சரத்குமார்தான் தேவை என வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அந்த கேரக்டரை நினைவில் நிறுத்த என்ன செய்திருக்கிறார்.?
தவறான ஆள் என முத்திரை குத்தப்பட்டு இட மாற்றம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாளை ( ரவி மரியா .) காவிரி நகர் பகுதிக்கு மாற்றியது எத்தகைய குற்றமோ அந்த அளவுக்கு அவரை மீட்டெடுத்தது தூக்குத் தண்டனைக்கு உரிய குற்றம் !
நல்ல முயற்சி.
எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கதாசிரியர்களை மீண்டும் கூட்டுச்சேர்க்காமல் கவனமாக இருப்பாரா ,வசந்த பாலன்.?
ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா,இசை ஜீவி பிரகாஷ் மிகப்பெரிய ஆறுதல் .