பிரபல யூடியூப் திரை விமர்சகர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) எழுதி, இயக்கியுள்ள படம், ‘ஆன்டி இண்டியன்’. ‘மூன் பிக்சர்ஸ்’ சார்பில் ஆதம்பாவா தயாரித்துள்ளார். சென்சாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல கட்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வெளிவந்துள்ளது. ஒட்டு மொத்த திரையுலகினரும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் எப்படியிருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரம் எழுதுபவர் ‘பாஷா’ (இளமாறன்). இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவருக்கு வயதான அம்மா, மூளையில்லாத முரடனான தாய்மாமன் இந்த இருவரைத் தவிர யாரும் இல்லை. இதனால் கொலை செய்தவர்களை பழிவாங்கவோ, சட்டத்தின் படி தண்டனை பெற்றுத்தரவோ யாரும் இல்லை.
இந்நிலையில் பாஷாவை அடக்கம் செய்ய கபர்ஸ்தான் (முஸ்லீம்களின் இடுகாடு) கொண்டு செல்கின்றனர். அங்கே அவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அதனால் அவரை அடக்கம் செய்ய இந்து மயான பூமிக்கு கொண்டு செல்கின்றனர். அங்கேயும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அவர் அடக்கம் செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது தான் ’ஆன்டி இண்டியன்’படத்தின் கதை, திரைக்கதை.
புறாக்கதையுடன் தொடங்கும், திசைமாறி செல்லாத திரைக்கதையே படத்தின் வெற்றியை உறுதி செய்துவிடுகிறது. க்ளைமாக்ஸ் வரை நேர்த்தியாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
பிணமாக நடித்திருக்கும் இயக்குநர் இளமாறன், ஏழுமலையாக நடித்திருக்கும் ஜெயராஜ், சரோஜாவாக நடித்திருக்கும் விஜயா மாமி, பசி சத்யா, வழக்கு எண் முத்துராமன், கில்லி மாறன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதையுடன் ஒன்றிவிடுகிறார்கள்.
க்ளைமாக்ஸ் கலவர ஆக்ஷன் காட்சித் தவிர, எந்தவிதமான பில்டப்புகளும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சமாச்சாரங்களுமின்றி வெகு இயல்பான காட்சியமைப்புகள் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் கதிரவன் இயக்குனரின் பலம்.
பலவிதமான கட் ஷாட்டுகள் மூலம் பரபரப்பான அரசியல் வசனங்களை விஜயகாந்த் படங்களில் பார்த்தும், கேட்டும் நாம் ரசித்தவை தான். ஆனால் இந்தப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் நுட்பமானவை. ஒரு காட்சியில் முதலமைச்சருக்கும் காவல்துறை உயரதிகாரிக்கும் நடக்கும் வசன உரையாடல், சென்னையில் நடந்த சில கலவரங்களை நினைவுப்படுத்துகிறது. இயக்குனர் இளமாறன் அரசியலின் அஸ்திவாரத்தை அசால்ட்டாக ஆட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.
படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் பலருக்கு நெருடலாகவும், குறையாகவும் இருக்கலாம்.
பந்தல்போடும் இளைஞனாக வரும் ‘விஜய் டிவி’ பாலாவின் காமெடி காட்சியில் சிரிக்காதவர்களே இருக்க முடியாது. மொத்த தியேட்டரும் சிரிப்பினால் குலுங்கும்.
அதிகமான தொழில்நுட்ப வசதிகளால் மட்டுமே வெற்றி கொடுத்த இயக்குனர்களுக்கு மத்தியில் ‘ஆன்டி இண்டியன்’ இயக்குனர் இளமாறன் உயர்ந்து நிற்கிறார்.