ஜீவி படத்தின் கதையாசிரியர் பாபு தமிழ் இயக்கியிருக்கும் படமே ‘க்’. இப்படத்தில் குருசோமசுந்தரம் மற்றும் யோகேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவீன் தயாரித்துள்ளார்.
பிரபல கால்பந்து வீரரான யோகேஷுக்கு ஒரு போட்டியின் போது கால் முறிவும், தலையில் காயமும் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனைக்கு வெளியே ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இதை மருத்துவமனையின் ஜன்னலிலிருந்து பார்க்கும் அவர் போலீஸிடம் சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் போலீஸ் பின்னர் விசாரிக்க ஆரம்பிக்கிறது. அதன்மூலம் பல திடுக்கிடும் பல விஷயங்கள் வெளிவருகின்றன. இது தான் ‘க்’ படத்தின் ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ கதை.
படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒருவிதமான சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் செல்கிறது. ஒய்.ஜி.மஹேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இன்னும் சுவாரஷ்யம் ஏற்படுகிறது.
நாயகனாக நடித்திருக்கும் யோகேஷ் புதுமுகமாக முடிந்தவரை நடித்திருக்கிறார். அவரது ஒரே முகபாவனை சற்றே அலுப்பினை ஏற்படுத்துகிறது. அவரது மனைவியாக நடித்திருக்கிறார் அனிகா. நடிப்பின் மூலமும் கவர்ச்சியின் மூலமும் பரவாயில்லை!
குரு சோமசுந்தரம் கதபாத்திரத்திற்கேற்ற சரியான தேர்வு. சின்ன சின்ன பார்வையிலும் சைக்கோ டச். அதிலும் சாவியின் மூலம் காரில் கீறல் போடுவது சூப்பர்.
ஒய்.ஜி.மஹேந்திரனின் அளவான நடிப்பு ரசிக்க வைக்கிறது.
திரைக்கதைக்கேற்ற ஒளிப்பதிவினை கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், இசையை கவாஸ்கர் அவினாஷூம் கொடுத்திருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைக்களத்துடன் சற்றே குழப்பமான திரைக்கதையினால் சொல்லப்பட்டிருப்பது படத்தின் பலவீனம்!
வித்தியாசமான படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.