ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பாக்ஸ்கான் தனியார் செல்போன் தொழிற்சாலை வரி ஏய்ப்பு தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை அடையாறில் உள்ள மாஸ்டர் பட தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் உறவினருமான ஜான் பிரிட்டோவின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஏற்றுமதி இறக்குமதி விவகாரங்களை ஜான் பிரிட்டோவின் நிறுவனம் கவனித்து வருவதால், அதன் தொடர்ச்சியாக வருமானவரி சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதுவரை வருமான வரித்துறை சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படாத நிலையில், சோதனை முடிந்த பின்னர் வரி ஏய்ப்பு குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம் அருகே நள்ளிரவு தொடங்கி 17 மணி நேரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.