ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றவைகளில் இந்திய காவல் துறையும் ஒன்று.
ஆங்கிலேய அதிகாரிகளை அல்லது அவர்களது அடிமைகளை காவலர்கள் “ஐயா.அல்லது எஜமான் “எனச்சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்கிற ஆதிக்க வாய் மொழி உத்தரவு இன்று சற்று .மாற்றம் . எஜமான் என்பது மாநகரங்கள் தவிர்த்த மற்ற இடங்களில் காவல் நிலையங்களில் இருக்கத்தான் செய்கிறது.
புகார் கொடுக்க வந்தவர்கள் கூட அப்படித்தான் சொல்ல வேண்டும். இல்லெயென்றால் நாய் மொழிதான் அதிகாரிகளின் வாய்மொழியாக பிறக்கும்.!
உதாரணம் ‘ரைட்டர் ‘ படத்தில் வருகிற இந்தி மொழி பேசுகிற டெபுடி கமிஷனர் .
இவர் இயக்குநர் பிராங்க்ளினின் சிறப்பான குறியீடு.! அந்த அதிகாரியின் சாதி வெறிக்கு காவலர் இனியா இரையானது நிகழ்கால நடப்புதானேய்யா .
இப்படியான பல எடுத்துக்காட்டுகளின் தொகுப்புதான் ‘ரைட்டர் ‘திரைப்படம்.
படத்தின் பெருமை என்ன?
சமுத்திரக்கனி,சுப்பிரமணிய சிவா, இயக்குநர் பிராங்கிளின் ஜேக்கப்..ஹரி கிருஷ்ணா.!
யாரும் தொடமுடியாத சப்ஜெக்ட் அல்ல ரைட்டர் . அஞ்சி ஒதுக்கி வைத்து விட்ட கதை.!
டாக்டரேட் வாங்குவதற்கு பல்கலைக் கழக மாணவன் ஹரி ( தேவகுமார்.) எடுத்துக்கொண்ட சப்ஜெக்ட். “காவல் நிலைய அதிகாரிகள் தூக்கிட்டு தற்கொலை செய்வது ஏன்” என்பது உள்ளடக்கிய லாக்கப் மரணங்கள். இதற்காக புள்ளி விவரம் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்த மாணவன். இவன் எதனால் போலீஸ் அதிகாரியினால் வேட்டையாடப்பட்டான் ?
காவல்துறை அதிகாரிகள் மரணம் தொடர்பாக மனு செய்தவர்கள் பலர் உயிருடன் இல்லை என்பது சிறப்புத்தகவல். ரைட்டரின் மையக்கருத்து , கரு இதுதான்.! இத கமர்ஷியலாகவும் எழுச்சியுடனும் சொல்ல வேண்டுமல்லவா?
இயக்குநர் திறமையுடன் சொல்லியிருக்கிறார்.!
அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சி வலை வீச்சின் பலி கிடா .ரைட்டர் தங்கராஜ். ( சமுத்திரகனி ) இயக்குநர் சிகரம் பாலசந்தரின் மோல்டுதான் கனி.
ரெண்டு பொண்டாட்டிக்காரர். (பொதுவாக காவல் துறையில் இதெல்லாம் சகஜமய்யா!) சட்டத்தை வளைப்பவர்களுக்கு சட்ட மீறல் என்ன உருக்கு சாதனமா, ?இல்லை அப்பளம் மாதிரி.! இது அந்தக் கால கதை.!!
நியாயஸ்தரான தங்கராஜ் ஓய்வு பெறும் கட்டத்தை நெருங்கி விட்டவர். இவர் அறியாமல் செய்யும் தவறுகள் ( அதிகாரத்தின் அநியாய மரண வேட்டை காரணமாக .) அப்பாவி இளைஞன் புல்லட்டுக்கு இரையாகிறான் .இந்த உச்ச பட்ச துரோகம் கனியின் முகுளத்தை செல்லரிக்க வைத்து விட்டது. பின்னர் என்ன நடந்தது என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கனியின் நடிப்பின் பரிணாம வளர்ச்சி இந்த படத்தில் புதிய பாதையை திறந்திருக்கிறது. பார்வையாளர்களை அழ வைத்து விட்டார்.பெண்கள் கண்களின் பக்கமாக முந்தானை அணை கட்ட முயற்சிப்பதை பார்க்க முடிந்தது. ஒரு நடிகனின் இமாலய சாதனை ! இதை விட அவார்டுகள் என்ன சாதித்து விடும் ?
நடிகனின் வளர்ச்சியை தீர்மானிப்பது அவனது நடிப்பாற்றலே அன்றி படங்களின் எண்ணிக்கை அல்ல.! வாழ்த்துகள் சமுத்திரக்கனி.
போலீஸ் வேட்டைக்கு இரையான தேவகுமாரின் அண்ணனாக சுப்பிரமணியம் சிவா.! இந்த மனிதனை இத்தனை காலமாக கட்டிப்போட்டிருந்தது யார்? பஸ்ஸில் ஏறி தம்பியை பார்த்து உருகும் காட்சி, காவல் நிலையத்தில் கண்ணீர் விட்டு கதறும் கதறல் ,தம்பியை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்கிற தவிப்பில் அலைபாய்கிற மனதுடன் வழக்குரைஞருடன் பயணித்தல் இப்படி எத்தனையோ சொல்லியபடியே போகலாம் .கனிக்காக பனித்த எனது கண்கள் இந்த சேவியருக்காகவும் கலங்கியது. உயரம் கம்மியாக இருந்தாலும் எஸ்.வி.சுப்பையாவை நினைவு படுத்தியது உச்சரித்த பாவனை.!
அடித்து நொறுக்கிவிட்டார்கள் அரி கிருஷ்ணாவை ! ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் பிள்ளை என்பதினால்தான் அதிகார வர்க்கம் தேவகுமாரை நொறுக்குகிறது.
ஆய்வாளராக வருகிற கவிதா பாரதியின் கிருதா மீசையை இயக்குநர் தவிர்த்ததற்கு காரணம் ,அந்த மீசை வேறு ஒரு குறியீட்டை தந்து விடுமோ என்கிற அச்சம் இயல்பானதுதான்.! மீசையில் கூட சாதி !
அந்தோணி ராஜா ,ஜி.எம் சுந்தர் ஆகியோர் துணை பாத்திரங்களாக இருந்தாலும் அச்சாணி மாதிரியாக படம் ஓடுவதற்கு உதவியாக இருக்கிறார்கள்.
வரவேற்கப்பட வேண்டிய முயற்சிதான் ‘ரைட்டர்’
. கமர்சியல் என்கிற வலைக்குள் நீலம் பா.ரஞ்சித் விழாமல் இருக்க வேண்டுவோமாக.!
–தேவி மணி