ஆணுக்குள்ள சுதந்திரம், பெண்ணுக்கும் வேண்டும்!அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்!பெண்ணே!,உன் சுதந்திரம் உன்கையில்! யாருக்காக காத்திருக்கிறாய் இன்னும்! என்கிற வரிகளை மிக அழுத்தமாகச் சொல்கிற படம்தான் “இறைவி”. இதை மிகவும் அழுத்தம்,திருத்தமாகவே சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்!
திரைப்பட இயக்குநர் அருள் (எஸ்.ஜே.சூர்யா). இவருக்கு தயாரிப்பாளருடன் ஏற்பட்டமோதலால் இவரது படம் அந்த தயாரிப்பாளரால் முடக்கப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் கவலை, கோபம், வெறுப்பு காரணமாக அருள், பெரும் குடிகாரராக மாறிவிடுகிறார். இதனால் தந்தை ராதாரவி, மனைவி யாழினி (கமாலினி முகர்ஜி) என அனைவரும் துயரத்தில் மூழ்குகின்றனர். ஜெகன் (பாபி சிம்ஹா) அண்ணனுக்கு உறுதுணையாக இருக்கிறார்.
இந்தக் குடும்பத்துக்கு நெருக்கமானவர் மைக்கேல் (விஜய் சேதுபதி). இவர் காதலில் நம்பிக்கை இல்லாத கணவனை இழந்த மலர்விழியுடன் நெருக்கமாக வாழ்கிறார். பலமுறை திருமணம் செய்து கொள்வதாக மைக்கேல் சொன்னாலும் மலர்விழி( பூஜா தேவரியா) தவிர்த்து விடுகிறாள். திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை வண்ண வண்ணக்கனவுகளுடன்அமைய வேண்டும் என்பதில் சினிமாத்தனமான கனவுகள் கொண்டவர் பொன்னி (அஞ்சலி). இந்த மூன்று பேரை மையப் படுத்தியே கதை நகர்கிறது. இதற்கிடையே மலர்விழி விஜய்சேதுபதியை மணக்க மறுத்ததால், பொன்னிக்கும் (அஞ்சலி)மைக்கேலுக்கும்(விஜய் சேதுபதி) திருமணமாகிறது.இந்நிலையில் பட வெளியீடு தொடர்பான தகராறு அருள் குடும்பத்தில் உச்சத்தை எட்ட,அதை தொடர்ந்து ஏற்படும் பிரச்னைகள் இந்த மூன்று குடும்பங்களின் வாழ்கையை அப்படியே தலை கீழாக புரட்டிபோட்டு விடுகிறது. இவற்றின் முடிவு தான் என்ன ? என்பது தான் இறைவியின் மீதிக்கதை!
மழையுடன் தொடங்கும் முதல் காட்சி நம்மை கதைக்குள் இழுக்க, இறுதிக்காட்சியிலும் மனதிற்குள் பெய்யும் மழையுடனே அரங்கை விட்டு வெளியேறுகிறோம்! முதல் காட்சியில் கமலினி முகர்ஜி, அஞ்சலி, வடிவுக்கரசி மூன்று பேருமே அந்த மழையில் நனைய ஆசைப்படுகிறார்கள். இறுதிக்காட்சியில் வடிவுக்கரசி, எண்ணமேதுமற்ற கோமாவில் இருப்பார். கமலினி முகர்ஜி, ‘நனையலாமா’ என்று கேட்கும் குழந்தையிடம் ‘நனைந்தால் ட்ரெஸ் நனைஞ்சுடுமே, வேணாம்’ என்பார். அஞ்சலி, தன் குழந்தையுடன் இறங்கி மழையில் நனைவார்.இந்த மழைக்காட்சியையே அந்தந்த கேரக்டர்களின் மனநிலையோடு பொருத்தி, சமுகத்திற்கான கருத்தையும் பெண்ணே! உன் முடிவு உன் கையில்! என வெளிப்படுத்திய விதத்தில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார்.தனது பாலியல் தேவையை நியாயப்படுத் தும் மலர் கதாபாத்திரம் வலுவானது.அதே சமயம் காதலை விட காமமே அங்கு ஜெயிப்பதால் அக் கேரக்டர் வீழலுக்கு இறைத்த நீர் போலாகி விடுகிறது. ‘கருவுல இருக்கற குழந்தையை தள்ளி வெச்சுட்டு இன்னொரு குழந்தை பெத்துக்குவியா?’ எனக் கேட்கும் அருள் , ‘எனக்கு ஒரு குழந்தை இருக்கு. ஆனா யாரும் என்கிட்ட லவ்வை சொன்னதில்ல’ எனக்கேட்கும் பொன்னி, திருமணமான பெண்ணின் மன உணர்வை, ‘பொறுத்துக்கறதுக்கும்.. சகிச்சுக்கறதுக்கும் நாம என்ன பொம்பளையா… ஆம்பளை” பெண் குறில்!ஆண் நெடில்!என நீட்டி முழக்கும் கிளைமாக்ஸ் வசனம்போன்றவை படத்தின் பலம்!விஜய் சேதுபதி,வழக்கம்போலவே இயல்பான நடிப்புதான் என்றாலும் பெற்ற குழந்தையே தன்னை அங்கிள் என அழைக்கும் காட்சியில் ஒரு நொடியில் தன முகத்தில் காட்டும் வேதனை!சூப்பர்!!இவன்தாண்டா குடிகாரன் என வாழ்ந்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா,பல நடிகர்களை ஓரம் கட்டிவிடக்கூடிய
அற்புதமான கலைஞன் ! கற்றது தமிழ், அங்காடித்தெருபடங்களுக்கு பிறகு அஞ்சலிக்கு ஒரு அழுத்தமான பாத்திரம் உணர்ந்து செய்துள்ளார்.ராதாரவி குடிகார மகனை வெறுத்து ஒதுக்க முடியாமல் தவிக்கும் பாசக்கார தந்தையாக வாழ்ந்திருக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம்.செல்வகுமார் விஜயன் ஒளிப்பதிவில் மழைக் காட்சிகளில் நமக்கு மனசெல்லாம் பறந்து சென்று நனையத் துடிக்கிறது.அதே சமயம் வசனங்களில் ஏன் இத்தனை ஆபாசம்.. வன்முறை.. தவிர்த்திருக்கலாம்! சில இடங்களில் தாராளாமாகவே கத்தரியை போட்டிருக்கலாம்! இழுவை! என்றாலும் ஒரு படைப்பாளியாக கார்த்திக் சுப்பராஜின் முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும் !