வேந்தர் மூவிஸ் மதன் மாயமானதில் இருந்து எஸ்.ஆர்.எம். குழும நிறுவனங்களின் மீதும், நிறுவனர் பாரிவேந்தர் மீதும் பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருத்துவம் படிக்க சீட் தருவதற்கு பல கோடி ரூபாயைப் பெற்றுக் கொண்டு, பிறகு இடம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக மாணவர்கள் பலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், பாரிவேந்தருக்கு எதிராக சென்னை சூளை பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2004ம் ஆண்டு, பாரிவேந்தர் தன்னிடம் 70 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். கடனுக்கு ஈடாக 35 கோடி ரூபாய் மதிப்புள்ள அவருக்கு சொந்தமான 5 சொத்துக்களின் பத்திரங்களை பாரிவேந்தர் தன்னிடம் அளித்துள்ளதாகவும் ,கடன் பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், கடனை திருப்பிச் செலுத்தவும் இல்லை என்றும், கடனுக்கு வட்டி கொடுக்கவும் இல்லை என்றும் ,இதுதொடர்பாக அவரை நேரில் பார்க்க பல முறை முயன்றும், தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக மோகன் குமார் கூறியுள்ளார். இதனிடையே பாரிவேந்தர் மிகவும் நல்லவர், கருணை உள்ளம் கொண்டவர் என்று இயக்குநரும் இயக்குநர் சங்கத்தலைவருமான விக்ரமன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படத்துறையினருக்கு உதவி செய்ய முன் வந்தவர் பாரி வேந்தர். கருணை உள்ளம் கொண்ட அவர் திரைப்படத்துறையினரைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு பல சீட்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். திரைப்பட இயக்குனர் சங்கத்திற்காக ரூ.30 லட்சம் மதிப்புள்ள நான்கு 5டி கேமரா வழங்கியுள்ளதாகவும், இயக்குனர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவசமாக உயர் அளவிலான சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் அளிக்கப்படுவதாகவும் கூறினார். எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் இயக்குனர்களின் குடும்பத்தை சேர்ந்த, தகுதியுள்ள 10 மாணவ, மாணவியருக்கு எந்த கல்வியானாலும் இலவசமாக வழங்கப்படுவதாகவும் கூறினார். இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே தற்போது மக்களிடம் அவரைப்பற்றிய நல்ல செய்திகளை கொண்டு சேர்ப்பதற்காக இந்த பேட்டி அளிப்பதாக கூறினார். வேந்தர் மூவிஸ் மதன் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் அதை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு போலீசுக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று 25 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி நடைபெறும் பேரணியில் பங்கேற்பேன் என்று கூறியுள்ள விக்ரமன், தன்னுடன் இயக்குநர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்த் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.