நடிகர் சூர்யா- ஜோதிகா இருவரும் சமீபத்தில் கேரளாவுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளனர் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் ஏற்கனவே வெளியான நிலையில்,தற்போது கேரளாவில் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நடிகை ஜோதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “3000 வருடங்களுக்கு முன்பே நம் இந்திய அறிவியலாளர்கள், நம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றும் சரிவிகிதத்தில் ஒன்றிப் போகும் போதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியமாகும் என்று கூறியுள்ளனர்.
நான் தற்போது இதை முற்றிலும் உணர்ந்துள்ளேன். இருபத்தியோரு நாட்கள் திருச்சூர் ராஜா தீவில் ஒரு நிறைவான மன நிலையை அடைந்துள்ளேன். சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில், இயற்கை தரும் ஆறுதலை,அதன் குணப்படுத்தும் சக்திகளை ஒரு மேஜிக் போல உணர்வு பூர்வமாய் அறிந்துகொண்டேன்.
மனதும், ஆன்மாவும் அமைதியாகி கரையும் போது தான் உண்மையில் நம் சக்தி அதிகரிக்கிறது. சரியான வாழ்வியல் முறையே நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும். நம் இந்தியர்களின் கண்டுபிடிப்பான ஆயுர்வேதா மற்றும் யோகா முறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
இந்த மாயாஜால அறிவியலை நமது அடுத்த தலைமுறைக்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நாம் கொண்டு சேர்க்க வேண்டும்..ராஜா கடற்கரை மற்றும் ராஜாத் தீவில் (திருச்சூர்) உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்