கொரோனா 3 வது அலை தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால், திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
கடந்த மாதம் நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைக்கு பின்னர் தொற்றிலிருந்து மீண்டனர். கடந்த வாரம் நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் நடிகை மீனாவும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவின் பிடியில் சிக்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை திரிஷா, ஷெரின், நடிகர் சத்யராஜ், இயக்குனர் டி பி கஜேந்திரன் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.இந்நிலையில் நடிகை ஷோபனாவுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நடிகை ஷோபனா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது,” அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போதும் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் வலி, குளிர் நடுக்கம், தொண்டை கரகரப்பு ஆகியவை எனக்கு அறிகுறிகளாக இருந்தன. முதல் நாளில் இத்தனை அறிகுறிகள் இருந்தன. பின்னர் படிபடியாக அந்த அற்குறிகள் குறையத் தொடங்கியது.
தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக்கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அது வைரசில் இருந்து 85 சதவிகிதம் பாதுகாப்பு அளிக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். வைரஸ் பெருந்தொற்று இந்த ஒமிக்ரானுடன் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையும், பாஜக செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது,
கடந்த இரண்டு அலைகளில் தப்பிய நிலையில் தற்போது இறுதியாக 3வது அலையில் எனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் தொடர்ந்து சளி பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது.
மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்தேன், அதில் எனக்கு கொரோனா உறுதியானது. அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. எனவே என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள். உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கொரோனா சோதனை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.