
வருடத்தின் ஒருநாளில்தான் வைகையில் அழகர் இறங்குவார்.இதைப்போல பொங்கல் விழாவும் ஒருநாள்.இந்த வரிசையில் கடைசி விவசாயியையும் சேர்த்துக்கொள்ளலாம்.
எப்போதாவதுதான் நல்ல கருத்துள்ள படம் , தமிழ்ச் சினிமாக்கு வரும் போல!!!
‘கடைசி விவசாயி’….போராடுவதே விவசாயியின் தலை எழுத்து.! தலைநகர் டெல்லியில் போராடி 700 இன்னுயிர்களை இழந்தவன்தான் விவசாயி.! அந்த விவசாயியின் ஒரு வகையான போராட்டத்தை மனம் வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறார்கள்.
கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு இயக்கம் ம.மணிகண்டன்.வாழ்க.வாழ்க நல்ல சினிமா!
கதை என்ன ,களம் என்ன?
இரண்டுக்கும் ஒரே பதிலாக வறட்சியில் வாழ்ந்து வரும் உசிலம்பட்டி மலையடி கிராமத்தை கண்முன் கொண்டு வந்து விட்டார் இயக்குநர் .
இதுவரை வகை வகையான வறட்சியை பல பல படங்களில் பார்த்தவர்களுக்கு இந்த கிராமத்தின் வயதான மாயாண்டி என்கிற அந்த விவசாயி மட்டும் ஏன் மனதில் உட்கார்ந்து விடுகிறார்.?
சிறிய அளவில் விவசாயம் செய்து வரும் அவரது வயலுக்கு அதிக விலை தர முன்வந்தாலும் விற்பதற்கு மனம் ஒப்பவில்லை. ஒருநாள் அந்த வானம் பார்த்த வயலில் மூன்று மயில்கள் செத்துக்கிடக்கின்றன.!முருகா இதென்ன சோதனை ! உயிர் விடுவதற்கு எனது வயல் தானா கிடைத்தது? செத்துப்போன மயில்களை கடவுளை வேண்டிக்கொண்டு தனது வயலிலேயே புதைத்து விடுகிறார்,அந்த விவசாயி.!.வில்லங்கம் முளை விடுகிறது.

தேசியப்பறவை.பாதுகாக்கப்பட்ட இனம்.செத்துப்போன தகவலை காவல் துறையிடம் சொல்லியிருந்தால் அவர்கள் வந்து போலீஸ் மரியாதையுடன் அடக்கம் பண்ணியிருப்பார்களே!போலீசுக்கு சொல்லாமல் எப்படி அவைகளை புதைக்கலாம். பொய்க்கேஸ் போட்டாக வேண்டுமே!மயில்களை அடித்துக்கொன்றதாக அந்த முதியவரை நீதியின் முன்பாக நிறுத்துகிறது காவல் துறை.!
15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிடுகிறபோது” தன்னுடைய விவசாயத்தை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் .தனது மாடுகளுக்கு அன்றாடம் தண்ணீர் வைக்க வேண்டும், பயிர்களுக்கு முறைப்படி நீர் பாய்ச்சவேண்டும்.ஒவ்வொரு பயிரும் உயிர்களய்யா “என்று வெள்ளந்தியாக அவர் சொன்னதை கேட்டு அதிர்ந்த மாஜிஸ்திரேட் “இந்த மனுசனா மயில்களை கொன்னு இருப்பான்? இவர் மீதுள்ள குற்றச்சாட்டினை நிரூபிக்கிற வரை விவசாயி அதுவரை பார்த்து வந்த விவசாய வேலைகளை போலீசே கவனிக்க வேண்டும் “என உத்திரவிடுகிறார். நல்ல எடுத்துக்காட்டு.!ஆனால் நடக்குமா ?

இதன் பிறகு முதியவர் மாயாண்டியின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது,விவசாயம் என்ன ஆனது என்பதை சொல்லுகிறார்கள்.
படம் முடிகிறவரை அந்த கிராமத்திலேயே வாழ்ந்த உணர்வினை நமக்கு தந்திருக்கிறார் கதாசிரியர் -இயக்குநர் ம.மணிகண்டன்.கதைக்கு ஏற்ற இடம் ,அந்தந்த கதையின் மாந்தர்களுக்கான நட்சத்திர தேர்வு ,வசனங்களில் யதார்த்தம் ,எல்லை மீறாமல் விவசாயியின் வறுமையை காட்டிய பாங்கு அருமை அருமை.!பாராட்ட வேண்டும். முதியவரான நல்லாண்டியின் இயல்பான பேச்சு ,உடல்மொழி நமது முக்கிய நட்சத்திரங்களுக்கு அந்நியமாகிப்போனவை.!சாதிக்கு எதிரான அந்த இளைஞரைப்போல தெருவுக்கு ஒருவர் இருந்தால் போதும்.!மாஜிஸ்திரேட் ரெய்ச்சல் தனிக்கவனம் பெறுகிறார். அந்த பயிர்களின் சாவுக்கு நாம் காரணமாகி விட்டோமே என குற்றவுணர்வு குறுகுறுப்பு பாராட்டுக்குரியது.
படத்தில் வந்தவர்கள் எல்லோருமே இயல்பான கிராமத்தவர்களை பிரதிபலித்தார்கள்.
எல்லாம் சரி விமர்சகரே ,மக்கள் செல்வன் விஜய சேதுபதியும் யோகிபாபுவும் இந்த படத்துக்கு எந்த அளவுக்கு உதவினார்கள்.?
கிராமங்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பதன் நகல்களாக இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய கவலையே இல்லாமல்தான் ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள். கதையில் அவர்களும் ஓர் அங்கம் !வித்தியாசப்படுத்த தேவை இல்லை.இவர்களை அவர்களது ரசிகர்களின் பார்வையில் பார்க்க வேண்டாம்.
சந்தோஷ் நாராயணின் பாடல் இசை, ரிச்சர்டு ஹாரியின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
இயக்குநர் மணிகண்டனுக்கு ……. காட்சிகள் கோர்வையுடன் செல்கிறதே ,எங்கே வெட்டுவது என்கிற குழப்பத்தில் படத்தின் நீளம் அதிகம் என்பதை கவனிக்கவில்லையா?