கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையை கூட்டி நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது.அதை கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் கவர்னர் 142 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.
கவர்னர் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ந்தேதி சட்டசபை அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி நேற்று , தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில்,நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் சட்டசபையில் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கே வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது,”நீட்தேர்வு மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்குட்பட்டு முறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் “எடுத்தது கண்டார்இற்றது கேட்டார்” என்று விரைந்து வினைப்படுகிறார் முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் நல்லது வாழ்க நலமே சூழ்க”. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.