கதர் வேட்டிக்கு கன்னாபின்னாவென கத்திரி போட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்..பாவம் காங்கிரஸ்காரர்கள் அவர்களில் பெரும்பாலோருக்கு காந்திஜி என்றால் பேப்பரில் படித்த செய்திதான் தெரியும். இன்றைய காங் .புள்ளிகளில் பலர் தண்ணி வண்டிதான் .!
அடிகளாரின் செல்லப்பிள்ளைகளில் நம்மவர் கமல்ஹாசனும் ஒருவர். மகான் திரைப்படத்தைப்பற்றி என்ன சொல்லப்போகிறாரோ ..ஹே ..ராம்.! மகானில் அதிக அளவில் காயப்பட்டிருப்பது மது விலக்கு தான்.!
மகானின் கதை என்ன என்பதை பார்ப்போம்.!
காந்தி குல்லா அணிந்து முழுமையான காந்தியாக வாழ்கிறவர் ஆடுகளம் நரேன்.மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்திருக்கிறார்.காந்தியைப் போலவே பிள்ளையும் வளரவேண்டும் என்று சில நேரங்களில் அடிக்கவும் செய்வார்.ஆனால் மகன் வளர்ந்தானா?
வாத்தியார் புள்ள மக்கு என்பதுதான் கதை ! பள்ளி வாத்தியாராக அறிமுகமாகும் சீயான் விக்ரம் பல அவதாரங்கள்.அதிலும் சாராய வியாபாரியான பின்னர் அடடே மாற்றங்கள்தான்.! அடிக்கடி பார்க்க முடியவில்லையே என ஆதங்கப்பட்ட மக்களுக்கு “என்னை விட்டா வேறு எவன்டா இப்படி நடிக்கப்போறான்” என்று சிக்ஸராக அடித்து விளாசியிருக்கிறார்.!!
சீயான் நீங்க கெத்துதான்!
இவருக்கு சரியான ‘நண்பேன்டா ‘பாபி சிம்ஹா.இருவரும் சேர்ந்து அதகளம் பண்ணுகிறார்கள்.நடிப்பதில் யாரும் சளைத்தவர் அல்லர் என்பதைப் போல போட்டி போட்டிருக்கிறார்கள். இயக்குநரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பான செய்கைகள்.ஒரு கேங்ஸ்டர் கதைக்குரிய பரிமாணம் இருக்கிறது.தொய்வின்றி பயணிக்கிறது .
சமகால நடிகர்களாக அப்பா விக்ரமும் ,மகன் துருவ் விக்ரமும் இருக்கிறார்கள் .கடுமையான ‘டப் ‘கொடுக்கிறார் துருவ் .! தற்கால நடிகர்களைப்போல உச்சரிப்பில் பிழை செய்யவில்லை. குரலில் இருக்கிற கம்பீரத்துக்கு தகுந்த மாதிரி வசனங்கள். தம்பி ,உன்னால் திரைத் தமிழ் பிழைத்தது.!
அப்பா விக்ரமுடன் சமமாக, சளைக்காமல் நடிப்பதில் போட்டியிடுகின்ற துருவ் வேறு எவர் வந்தாலும் எதிர்கொள்வார் என்கிற நம்பிக்கையை இந்த ‘மகான்’ கொடுத்திருக்கிறது. இரட்டை வேட கதைகளுக்கு முதலில் பரிசீலிக்கக்கூடிய நடிகராக துருவ் இருப்பார் என்று நம்பலாம். தனி ஒரு நாயகனாக தென்னக சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கிறார் துருவ் .
கதைகளை தேர்வு செய் .நடிப்பதில் கவனம் செலுத்து. மகனே உன் சமத்து.!
விக்ரமின் மனையாளாக சிம்ரன்.எப்படி சோடை போவார்? அமைச்சராக முத்துக்குமார் .சனத் சிறப்பு .!
இசைக்கு சந்தோஷ் நாராயணன்.தியேட்டரில் பாடலை கேட்பதற்கு இதமாக இருக்கிறது. தியேட்டரின் ஒலிப்பதிவு சிஸ்டத்துக்கு கேட்க இனிமை தான்.
“எவன்டா எனக்கு கஸ்டடி ?’ பாடலை சந்தோஷ் நாராயணன்,அவரே பாடியிருக்க வேண்டுமா தோழரே “?குரல் அந்த காட்சியில் ஒத்துழையாமை போர் நடத்தியிருக்கிறதே!
ஒரு கேங்ஸ்டர் கதையில் சமூகப் பார்வையை திறனுடன் சொல்வதில் கார்த்திக் சுப்பராஜ் கெட்டிக்காரர்தான்.!சில காட்சிகளை முன்னர் வந்த படங்களில் பார்த்த ஞாபகம் வந்திடுதே!!
மகான் என்று பெயர் வைத்ததினால் காந்தியடிகளை கைம்மா பண்ணியிருக்க வேண்டுமா?அவரது கொள்கைகளை விளாசித் தள்ளியிருக்க வேண்டுமா? விஸ்கி பிராந்தி சாராயத்துக்கு கொடி பிடித்திருக்க வேண்டுமா? கொள்கை என்பது தீயதா?காந்தியடிகளை மதுரையை சேர்ந்த கார்த்திக் சுப்பராஜ் மறுபடியும் போட்டுத்தள்ளியிருக்கிறார். இவர் சங்கியா?
அவர் எப்படி இருந்தால் என்ன என்று விட்டுவிடமுடியாத அளவுக்கு மகான் படம் வாழ்கிறது.
நீளம் எப்படி?
ஓடிடி தளத்தினரே எடிட் செய்து கொள்வார்கள்.
மகான் சிறப்பு. அமேசானில் பார்க்கலாம். எத்தனை தடவையும் பார்க்க ஒரு மகான்.!