தமிழ்ச் சினிமாவுக்கு வந்திருக்கிற புதிய அரசியல்தான் பா.ரஞ்சித்.!
திராவிட அரசியலின் புதிய வடிவமாக அவரை சிலர் பார்க்கிறார்கள். அதனால்தான் அவரை புதிய அரசியல் என அழைக்கத் தோன்றுகிறது .
“பல கேள்விகளை கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசும் படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஆள் நான்” – ’என அவர் குதிரைவால்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய பேச்சும் அதைத்தான் காட்டுகிறது.
அவரது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் திரைப்படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், யாழி நிறுவனத்தின் விக்னேஷ் சுந்தரேசனுடன், நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’.
அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லினோனல் ஜேசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுத்தாளர் ஜி.ராஜேஷ் குமார் எழுதியிருக்கிறார்.
கலையரசன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஞ்சலி பாட்டீல் நாயகியாக நடித்திருக்கிறார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது.
இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், “ரொம்ப மகிழ்ச்சியான நிகழ்வு இது. சினிமாவுல பல வகைகள் இருக்கு, அதை பார்த்து தான் சினிமாவுக்கே நான் வந்தேன்.
இந்த சமூகம் நான் எந்த சினிமாவினால் பாதிக்கப்பட்டு வந்தேனோ ,அதுபோன்ற ஒரு சினிமாவை எடுக்க விடவில்லை. பல கேள்விகள் கேட்கிற, எனக்குள் இருக்கும் பதில்களை பேசுகிற திரைப்படங்களை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆள் நான். ஆனால், அதை ரசித்து மிக சந்தோஷமாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன். அது சமூகத்தில் நிறைய கேள்விகளை உருவாக்குகிறது என்றும் நம்புகிறேன்.
ஜெனி மூலமாக மனோஜ் மற்றும் அவருடைய குழுவை சந்தித்தேன். அப்போது ராஜேஷ் நான்கு மணி நேரம் கதை சொன்னார். நான் புத்தகத்தை படித்துவிடுகிறேன், என்று கேட்டேன். அதை கொடுத்தார்கள். ஆனால், அது ஐந்நூறு பக்கங்கள் இருந்தது. பிறகு மனோஜ் இயக்கிய குறும்படம் ஒன்றை பார்த்தேன், மிக சிறப்பாக இருந்தது. எனக்கு பொதுவாக தன்னிச்சை படைப்பாளிகள் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்களால் தான் புதிதாக சொல்ல முடியும், ரசிகர்களுடைய கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு கதை சொல்வார்கள். அதுபோல தான் குதிரைவால் படத்தை நான் பார்த்தேன். குதிரைவால் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. ராஜேஷோட பேச்சு, நம்பிக்கை சம்மந்தமான பேச்சு போன்றவை கவர்ந்தது.
சினிமா நிரந்தர வருமானம் அல்லது லாபம் இல்லாத தொழிலாக இருக்கிறது. சினிமா மிகப்பெரிய லாபம் கொடுக்கும் தொழில்தான் ஆனால் எல்லோருக்கும் லாபம் கொடுக்காது. இதை நான் எல்லோரிடமும் சொல்வதுண்டு. படம் தயாரிக்க வேண்டும் என்று வருபவர்களிடம்நான் இதை சொல்லாமல் இருக்க மாட்டேன். ஏன் என்றால் ஆர்வத்தில் சினிமாவுக்கு வருகிறார்கள். பிறகு அதில் இருக்கும் பாதிப்புகளால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியவில்லை. அதனால், சினிமாவில் இருக்கும் பாதகங்களை நான் முதலில் சொல்வேன், அதை கேட்டுக்கொண்டு தொடர்ந்து பயணிக்க விரும்புகிறவர்களிடம் சினிமாவில் இருக்கும் சாதகங்களை சொல்வேன்.
இப்படி நான் சினிமாவுக்கு வர விரும்பிய பலரை தடுத்திருக்கிறேன். அப்படித்தான் விக்னேஷிடம் சினிமாவில் பாதகங்களை கூறினேன். ஆனால், அதை கேட்ட பிறகும் அவர் படம் தயாரிக்க தயாராகவே இருந்தார். இந்த படம் எந்த மாதிரியான படம், இந்த படம் கமர்ஷியல் ரசிகரகள் பார்க்கும் படமா? அப்படி இல்லை என்றால் இந்த படத்தை இந்த பட்ஜெட்டில் எடுக்க வேண்டும், என்று கூறினேன். அதே சமயம், இந்த படத்தை நாம எடுக்கவில்லை என்றால், வேறு யாராலும் எடுக்க முடியாது, என்றும் கூறினேன். அதேபோல், ராஜேஷ் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் விக்னேஷிடம் அனைத்து தகவல்களையும் சொல்லுங்கள் என்று கூறினேன். அப்போது மனோஜ் விக்னேஷிடம் பேசுக்கொண்டு தான் இருக்கிறேன், என்று சொல்வார். இவ்வளவு பிரச்சனைகளையும் கடந்து விக்னேஷ் இந்த படத்தை ரிலீஸ் வரை எடுத்து வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி.
ஏன் என்றால், ஒரு படத்தை ஆரம்பிக்கும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இருக்கும் உறவு, படம் முடியும்போது இல்லாமல் போகிறது. இது என் சினிமா பயணித்தில் நான் எதிர்கொண்டிருக்கிறேன். அவ்வளவு பிரச்சனைகள் இங்கு இருக்கிறது. நமக்கு இடையே இருப்பவர்களே பிரச்சனையை உருவாக்கி விடுவார்கள்.
மாயாலாஜத்திற்கும் நிஜத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு தான் இந்த படம். என்னுடைய ஓவியங்களில் கூட இதை நான் பயன்படுத்தியிருக்கிறேன். நாம நிஜத்தில் தொலைத்த நிறைய விஷயங்களில் கனவில் தேடுவோம், அந்த சுகத்தை கனவில் அனுபவிப்போம், அதை தான் இந்த படம்பேசுகிறது என்று நினைக்கிறேன். ஒரு தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை. அப்படி ஒரு படமாகத்தான் குதிரைவால் படம் இருக்கும். குதிரைவால் தமிழ் சினிமாவின் தொடக்கமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.”என்கிறார்.