வலிமை..
கதை வசனம்: எச் .வினோத், ஒளிப்பதிவு:நீரவ் ஷா , ஸ்டண்ட் காட்சிகள் :திலீப் சுப்பராயன், இசை; யுவன் சங்கர் ராஜா , பின்னணி இசை : ஜிப்ரான் .
அஜித்குமார் ,ஹியூமா குரேஷி ,கார்த்திகேயா , செல்வா ,ஜி.எம்.சுந்தர் , அஷ்யுத் குமார் ,சுமித்ரா .சாத்தானின் அடிமைகள், பைக் ரேஸர்கள்,
********************************************
அஜித் குமார் என்கிற இந்தப் பெயர் தமிழ்ச்சினிமா வரலாற்றில் தனித்தன்மை மிக்கது. ரசிகர் மன்றமே வேணாம் என்று இருந்ததையும் கலைத்துவிட்டு ,பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டாமல் ,பத்திரிகையாளர்களையும் நெருங்காமல் வாழ்கின்ற இந்த மனிதர் ,நடிகர், திரையில் வெற்றி பெற்று வருகிறார் என்றால் அதற்கு காரணம் அந்த மனிதனின் தன்னம்பிக்கை. முக வசீகரம் முக்கிய காரணம்.!
திரையில் முகம் தெரிந்ததுமே ரசிகன் மயங்கி விடுகிறான் ,அவனை (ளை ) மறந்து எழுந்து நின்று ஆடுகிறான் ( ள் ).ஆண் , பெண் இரு பாலரும் அஜித்தை காதலிக்கிறார்கள்.
அஜித்தின் மக்கள் செல்வாக்கினை மனதில் வைத்துக்கொண்டு லைட் வெயிட்டாக ஒரு கதையை தயார் பண்ணியிருக்கிறார் இயக்குநர் எச்.வினோத். படத்தை முழுமையாக சுமந்தவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும் ,ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவும் தான்.!
சென்னை பெருநகரின் பைக்கர்கள் முகம் தெரியாமல் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெண்களின் சங்கிலிகளை பறித்துக்கொண்டு பறக்கிறார்கள். இதில் படுகாயம் அடைந்த பெண்களும் உண்டு .உயிரை விட்ட பெண்களும் இருக்கிறார்கள்.இதனால் போலீஸ் மீது மக்கள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த சங்கிலித் திருடர்களுக்கு மாஸ்டராக இருக்கிற சாத்தானின் அடிமைகளின் தலைவன் யார்?
கண்டுபிடிக்க வருகிற காவல்துறை அதிகாரி அர்ஜூன் ( அஜித் ) கடமையை நிறைவேற்றினாரா,? சாத்தானின் அடிமைகளின் போதை பொருள் புழக்கத்தை தடுத்தாரா?
இதைத்தான் பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்…
இந்தப்படத்தில் வந்த அளவுக்கு மிரட்டலான பைக் சண்டைகள் ,சாகசங்கள் வேறு இந்தியப் படங்களிலும் வந்ததில்லை. ( நான் பார்த்ததில்லிங்க .பார்த்திருந்தா சொல்லுங்க.!) என்று சத்தியம் பண்ணலாம். பைக்கர்களின் வேகம் தாங்காமல் ரோடுகள் கதறி இருக்கும்.ப்பா. எரிமலையின் சீற்றம்.!
குடிகார ,குற்றவாளிகளைத் திருத்துவதற்கு காந்தியடிகளின் புத்தங்களைத் தருகிற போலீஸ் அதிகாரி அஜித் தன்னுடைய வீட்டில் இருக்கும் குடிகார அண்ணனை நல்வழிப்படுத்த என்ன முயற்சி எடுத்தார்,? அதுவும் தன்னுடைய பாக்கெட்டிலேயே கை வைக்கும் அண்ணனை தடுக்கக்கூட இல்லையே! இப்படி சிற்சில முரண்கள் இல்லாமல் இல்லை.தம்பி சாத்தானிடம்சென்று விட்டான் என்பதைக்கூட அவரால் கண்டு பிடிக்க முடியவில்லையே! அந்த அளவுக்கு போதை பொருள் மன்னன் பலம் வாய்ந்த கெட்டிக்காரன் !நல்ல சீன் .!
திருட்டுக்கும் ,கொலைச்செயல்களுக்கும் வேலையின்மையே காரணம் ,இளைஞர்களை தீய வழியில் சமூக விரோதிகள் பயன் படுத்துவதற்கு ஏதுவாகிவிடுகிறது.என்பதை வினோத் சொல்லியிருக்கும் பாங்கு அரசு அதிகாரிகள் கவனிக்கத் தக்கவையாகும் .. வேலியே பயிரை தின்னும் என்பதற்கு ஜி.எம்.சுந்தர்…இயல்பான ஒன்றுதான்! இன்றும் அரசின் பல துறைகளில் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
நேர்மையான அண்ணனுக்கு எதிராக சென்டிமெண்டாக எதிரியை உருவாக்கி அதில் இரக்கத்தை சம்பாதிப்பது தமிழ்ச்சினிமாவுக்கு புதிதல்ல.இதிலும் தம்பியை கடுமையான துரோகியாக காட்டுகிறார்கள்.
சக போலீஸ் அதிகாரியாக ஹியூமா குரேஷி .காதல் டூயட் பாட வழியில்லை.
சாத்தானின் அடிமைகள் மாஸ்டராக கார்த்திகேயா,.சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மின்னணு அறிவினை வெளிப்படுத்துகிற காட்சிகள் கவனத்தில் கொள்ளவேண்டியவை.
சென்னை மாநகர கமிஷனராக செல்வா. மீசை கம்பீரம்.
மதுரை சித்திரைத் திருவிழா,சென்னை மற்றும் அவுட்டோர் சாலைகளில் பறக்கிற பைக்குகளை படமாக்கியுள்ள ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுக்கு வாழ்த்துகள் .அண்ணே சூப்பரண்ணே !
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பான் -இந்திய படம் ,அஜித் ரசிகர்களுக்கு தலை வாழை விருந்து.!