கடந்த சில வாரங்களுக்கு முன் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் உருவாகும் துர்கா படத்தை கபாலி, கே ஜி எஃப், கைதி உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றிய இரட்டை சகோதரர்களான அன்பறிவு மாஸ்டர்ஸ் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சண்டை இயக்குநர்கள் அன்பறிவு மாஸ்டர்ஸ் இருவரும் துர்கா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில், “இயக்குனர்கள் ஆக வேண்டும் என்ற கனவோடு தான் திரை உலகிற்குள் வந்தோம். காலம் ஒரு கட்டத்தில் எங்களை ஸ்டண்ட் மேன் ஆக மாற்ற தற்போது ஸ்டண்ட் இயக்குனர்களாக இருக்கிறோம்.
ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் அவரது தயாரிப்பில் எங்களுக்கு துர்கா படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். நாங்களும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டோம். ஆனால் தற்போது முன்னதாக ஒப்புக்கொண்ட ஸ்டண்ட் இயக்கத்திற்கான பணிகளின் காரணமாக இந்த அற்புதமான வாய்ப்பை விட்டு விலகுகிறோம் என கனத்த இதயத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்களது இந்த நிலைமையை புரிந்து கொண்ட ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு நன்றி. நாங்கள் படத்தை இயக்கவில்லை என்றாலும் படத்தின் ஒரு அங்கமாக துர்கா படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக எங்களது சிறப்பான பங்களிப்பை அளிப்போம்” என தெரிவித்துள்ளனர். இதையடுத்து இப்படத்தை ராகவா லாரன்ஸே இயக்குகிறாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குகிறாரா என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது