ஜெய்பீம் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூரியா நடிப்பினில் தற்போது வெளிவந்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தினை இயக்கி இருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ்.இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ், வினய், ஜெய் பிரகாஷ், பஞ்சு சுப்பு, தேவதர்ஷினி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.
அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய பாலியல் துன்புறுத்தலினை நினைவுபடுத்துகிறது, இந்தப்படம்.
மத்திய, மாநில அரசுகளின் மொத்த அதிகாரத்தினையும் தன்னுள் வைத்துள்ளவர் வினய். இவர் பெண்களை காதல் வலையில் விழவைத்து, ஆபாசமாக படம் எடுத்து, மிரட்டி அதன் மூலம் தனக்கு வேண்டியதை சாதித்து கொள்கிறார். இது சூரியாவுக்கு தெரிய வருகிறது. அந்த அப்பாவி பெண்களை காப்பாற்ற முயற்சி செய்கிறார். இந்த முயற்சியின் போது சூரியாவின் மனைவியும் சிக்கிக் கொள்கிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே திரைக்கதை.. க்ளைமாக்ஸ்!
ஜெய்பீம் படத்தினில் இறுக்கமான வக்கீலாக நடித்த சூரியாவுக்கு இந்தப்படத்தில் கலகலப்பான வக்கீல் கதாபாத்திரம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என படம் முழுவதும் சுறுசுறுப்பாக வருகிறார். அடிதடியிலும் சூறாவளியாக சுழல்கிறார். சூரியாவிற்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன். ஆட்டம், பாட்டத்துடன் எமோஷனலாக பேசி நடித்து ரசிகர்களை கவர்கிறார். குறிப்பாக தாய்மார்களின் கண்களை கசியச் செய்கிறார். காதல் காட்சிகளில் இளைஞர்களையும் கவர்ந்துவிடுகிறார்.
சூரியாவுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் போடும் திட்டம் சிரிப்போ… சிரிப்பு . அதேபோல் இளவரசு, தேவதர்ஷினி சம்பந்தபட்ட காட்சிகளும் சிரிக்க வைக்கின்றன.
பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் வில்லனாக வினய், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். க்ளைமாக்ஸில் அவர் புஸ்ஸாகி போவதை ஏற்க முடியவில்லை.
நயவஞ்சக காதல் வலையில் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்த பெண்களுக்கு சூரியாவின் மூலமாக தைரியம் கொடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். பாராட்டுக்கள் பாண்டிராஜ்.
பெண்களிடம் ‘காவலன்’ செயலியை பற்றி பேசும் காட்சியிலும், ‘பாலுறுப்புகள்’ மட்டுமே கௌரவம் இல்லை. என தெளியவைக்கும் காட்சிகளிலும் சூரியா, பாண்டிராஜ் ஆகிய இருவருமே உயர்ந்து நிற்கின்றனர்.
இசையமைப்பாளர் டி. இமான் இசையில் தேவையில்லாத இடங்களில் வலுகட்டாயமாக பாடல்காட்சிகள் இடம் பெறுகிறது. அதனால் சற்று சோர்வு.
இன்றைய சமூகத்திற்கான பொறுப்பான படம் தான்,
இந்த ‘எதற்கும் துணிந்தவன்’ அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். இந்த படமும் சூரியாவிற்கு கௌரவம் சேர்க்கும்!