![Oru-Melliya-Kodu-movie-41](https://cinemamurasam.com/wp-content/uploads/2016/06/Oru-Melliya-Kodu-movie-41.jpg)
அவர் இதற்கு முன் இயக்கிய “குப்பி, வனயுத்தம்” ஆகிய இரண்டு படங்களுமே விமர்சகர்களால் பெரிதும பாராட்டப்பட்ட படங்கள். அந்தப் படங்களை நிஜ சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொடுத்து பேசப்பட்டார். அதே போல இந்தப் படமும் நிஜ சம்பவம் ஒன்றின் கதையா இருக்குமோ என்று பட வெளியீட்டிற்கு முன் பத்திரிகைகளில் பரபரப்பாகப் பேசினார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய படங்களின் மூலம் மீடியாக்களிடமும், ரசிகர்களிடமும் பெயரெடுத்தவர் இயக்குனர் ரமேஷ்.
இந்த ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திலும் அவருடைய திரைக்கதைதான் படத்தின் ஹைலைட். ஒரே ஒரு இரவில் நடக்கும் கதைதான் இந்தப் படம். பிரபல பெண் தொழிலதிபரான மனிஷா கொய்ராலா கொலை செய்யப்பட, அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்தவதற்காக பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், திடீரென அவருடைய உடல் காணாமல் போய்விடுகிறது. மனிஷாவின் கணவரான ஷாம் மீது சந்தேகம் கொண்டு போலீஸ் அதிகாரியான அர்ஜுன் அவரை தன்னுடைய விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். காணாமல் போன மனிஷாவின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார். அதன் பின் என்ன நடந்து என்பதுதான் படத்தின் பரபரபப்பான திரைக்கதை.
அறிமுகமான காலத்திலிருந்தே போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் என்றால் அர்ஜுனுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஷாமை விசாரிக்கும் காட்சிகள் அனைத்திலும் கம்பீரமான போலீஸ் அதிகாரி கண் முன் நிற்கிறார். அர்ஜுன் இந்தப் படத்தில் அமைதியான போலீஸ் அதிகாரியாக நடிப்பில் அதிரடி காட்டியிருக்கிறார்.
தன்னை விட மூத்த வயதுடைய மனிஷா கொய்ராலாவைத் திருமணம் செய்து கொண்டாலும் இன்னொரு பக்கம் அக்ஷா பட்டை காதலித்துக் கொண்டிருக்கிறார். படத்தில் ஆரம்பம் முதலே ஷாமை வில்லனைப் போலவே தெரிகிறார்.
மனிஷா கொய்ராலா சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள படம். ஷாமின் காதலியாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷா பட் தமிழுக்கு வந்துள்ள அழகான அறிமுகம். அர்ஜுனின் வலது கரமாக படத்தின் இயக்குனர் A.M.R.ரமேஷும் விசாரணை அதிகாரியாக கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
இளையராஜாவின் இசை வழக்கம் போலவே பின்னணி இசையில் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
‘ஒரு மெல்லிய கோடு’ – மிரட்டலான த்ரில்லர்.