விக்ரம் பிரபு ,அஞ்சலி நாயர்,லால்,எம்.எஸ்.பாஸ்கர்,மதுசுதன்ராவ்,பாவெல்,போஸ் வெங்கட்,பிரகதீஸ்வரன்,கார்த்திக்,
கதை வசனம் இயக்கம் :தமிழ் ,இசை :ஜிப்ரான் ,ஒளிப்பதிவு :மாதேஷ் மாணிக்கம், தயாரிப்பு:பொடன்சியல் ஸ்டுடியோஸ் .
#################################################
ஒருகாலத்தில்போலீஸ்காரர்களை டாணாக்காரன் என்று சொல்வார்கள். கிராமம் வரை புழங்கிய வார்த்தை.
அந்த டாணாக்காரர்களுக்கு எத்தகைய பயிற்சி அளிக்கப்பட்டது என்பதை இன்றைய கட்டளை சொற்களுடன் இயல்பாக ,வெகு இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.
போலீஸ்காரர்கள் நம்மிடம் கடுமையாக இருப்பதற்கு பயிற்சியில் பட்ட துன்பங்கள் ,துயரங்கள் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மனரீதியான பாதிப்பு.
அடுத்து நியாயம் ,தர்மம் ,இல்லாமல் வன்மம் ,பொறாமை இருப்பதற்கு ,பயிற்சி காலத்தில் அவர்கள் அனுபவித்ததின் வலி காரணமாக இருக்கலாம். ஒருவனை உயர்த்துவதும் ,அவனிடம் வன்மத்தை விதைப்பதற்கும், மேலதிகாரிகளே காரணம் என்பதும் ,இத்தனையையும் சகித்துக்கொண்டு அவன் அடங்கிப்போவதற்கு அந்த காக்கிச்சட்டை மீது அவனுக்கிருக்கும் காதலே காரணம். பக்தி என்று சொன்னாலும் தப்பில்லை. அதை அணிந்து கொண்டு அவன் பரேடில் போடுகிற வீர ,கம்பீர நடையே அதற்கு சான்று .விக்ரம் பிரபு சூப்பர் !
இவ்வளவு முன்னுரை எழுதுவற்கு காரணம் டாணாக்காரனில் வருவது அத்தனையும் உண்மையின் பதிப்பாகவே இருக்கிறது!
இக்காலத்திய பயிற்சியில் நெப்போடிஸம் ,பேவரிட்டிசம் இல்லை என உளமார அதிகாரிகளால் சொல்ல முடியுமா?
இனி படத்துக்குள் வரலாம் . நீதியுடன் போராடி வாழ்நாளில் இளமைக்காலத்தை இழந்தவர்களுக்கு நீதி கிடைத்த பிறகு கிடைக்கும் பயிற்சியின் அடையாளம் முதுமையும் காதோரம் விழுந்த நரை,வழுக்கை.!! இவர்களுடன் விக்ரம் பிரபு போன்ற வாலிபர்களும் கலந்து பயிற்சியில் ஈடுபட வேண்டியதிருக்கிறது.
ஈஸ்வரமூர்த்தி என்கிற வன்மம் பிடித்த பயிற்சி அதிகாரியின் கீழ் அவர்கள் இயங்க வேண்டியதிருக்கிறது. லால் என்கிற சிறந்த நடிகர் அந்த அதிகாரியாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது கண்களில் “நான்தான் உயர்ந்தவன்.”என்கிற திமிர் ,எனது கட்டளைக்கு அடிபணியாதவனை தாழ்த்துவேன் என்கிற ஆணவம் பொங்கி வழிகிறது .
நீதிக்கு அடிபணிவோம் ,நியாயமற்றவைகளுக்கு குரல் எழுப்புவோம் என்கிற மனம் விக்ரம் பிரபுவுக்கு.! இவரது தாத்தா நடிகர் திலகம் இருந்திருந்தால் ஆனந்த கண்ணீர் வடித்திருப்பார். “எவனொருவன் உடலை வருத்தி நடிக்கிறானோ அவன்தான் இயல்பான நடிகன் “என்பார். அந்த இயல்பான நடிகன் தனது இல்லத்தில் இருக்கிறான் என்றால் பெருமைதானே!
இயக்குநர் தமிழ் நடிகர்களை டிரில் வாங்கியிருக்கிறார். குறிப்பாக விக்ரம் பிரபுவின் முகம் மணலில் அழுந்தும் அளவுக்கு அடித்திருக்கிறார். விக்ரம் பிரபு கவாத்து பயிற்சியும் சரி ,எம்.எஸ்.பாஸ்கரின் துயரத்தில் பங்கு பெரும் நிலையிலும் சரி உயர்வான நடிப்பு. அதிகாரிகள் கேட்கும்போது மட்டுமே குறைகளை வெளிப்படுத்தும் ஒரு கேடட் டாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிற பங்கு அவரது அறிவு என்கிற கேரக்டரை கவுரவப்படுத்தியிருக்கிறது.அந்த குடும்பத்திற்கே உரிய குரல் வளம் இயற்கையின் கொடை ! வசனங்கள் எளிதாக இருப்பதுடன் இயல்பாகவும் வலிமையாகவும் இருப்பதற்கு இயக்குநர் தமிழின் பட்டறிவு காரணம் என சொல்வேன்.!
அஞ்சலி நாயர் மனதில் இருப்பது காதல் என்றாலும் அதில் வயப்படாதவராக விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். சூப்பர்.ஜிப்ரானின் சாங்க்.இதம்,சுகம் .!
இந்த படம் ஓடிடியில் வெளியானால் என்ன , குடும்பங்களால் கொண்டாடப்படும் சிறந்த படமாக இருக்கப்போகிறது. அந்த தளத்தில் வெளியாகிய சிறந்த படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் கண்ணியமான படைப்புதான் இந்த படம் .உலகுக்குத் தெரியாத உண்மைகளை டாணாக்காரன் வழியாக சொல்லியிருக்கிறார்.பாராட்டுவோமாக !
அஞ்சலி நாயர் கவுரவ பிரஜை.
எம்.எஸ்.பாஸ்கரை நான் காமடி நடிகராகவே பார்ப்பதில்லை. அவரால் சிரிக்க வைக்கிற அளவுக்கு நம்மை உருக வைக்கவும் முடியும். சிறந்த கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். வில்லனாக இருந்த டி .எஸ்.பாலையா பின்னர் நல்ல காமெடியனாகவும் கலகலக்க வைத்தார்.இவரைப்போலவே வாழ்கிற பாலையாவாக பாஸ்கர் இருந்து வருகிறார். இவரை இயக்குநர் அட்டென்ஷனில் நிற்க வைத்திருக்க வேண்டாம்.!
மதுசுதன்ராவ் ,போஸ் வெங்கட் ,பாவெல் ,அந்த குண்டு மனிதர் ,ஆகியாரும் கதையுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.
டாணாக்காரனின் சிறப்புக்கு ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கமும் முக்கிய காரணம் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.