டெல்லியில் நடந்த 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியின் அவசியம் குறித்து பேசுகையில்,”அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார்.
நிச்சயமாக இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை உயர்த்தும்.மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். வட மாநிலங்களில் இருக்கும் 9 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வழக்காக இந்திக்கு மாறி இருக்கின்றனர்.
8 வட மாநிலங்களும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க சம்மதம் தெரிவித்து இருக்கின்றன.அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்.” என பேசினார்.
இவரது பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை அமித்ஷாவின் இந்த கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பு என சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.அமித்ஷாவின் கருத்து வெளியான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழண்ணையின் படத்தை வெளியிட்டு ,அதன் கீழ், தமிழணங்கு என்றும், “இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரியையும் பதிவு செய்து அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சிஐஐ கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார்.
இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஐகான் விருதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வழங்கினார்.
விழா முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் “தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி” என சிரித்தபடியே கூலாக கூறி விட்டு காரி ஏறி புறப்பட்டார்