கதை ,இயக்கம்:பிரஷாந்த் நீல் ,ஒளிப்பதிவு :புவன் கவுடா, இசை :ரவி பஸ்ரூர் .
யாஷ்,ஸ்ரீ நிதி ஷெட்டி, ரவீனா டண்டன் ,சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் ,மாளவிகா அவினாஷ் ,
******************
2 மணி 48 நிமிடம் ஓடுகிற பெரிய ,பிரமாண்டமான படம். கோலார் தங்கச் சுரங்கத்தை தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்த டான் ராக்கி எப்படி வளர்ந்து ,வாழ்ந்து அழிந்தான் என்பதை இந்த இரண்டாம் பாகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு கொள்ளையன் இருந்தால் அவனுக்குப் போட்டியாக மற்றொருவன் இருப்பது இயல்பு.ராக்கிக்கு எதிரி ஆதிராவாக வருகிறார் சஞ்சய் தத். சரியான தேர்வு. ஒரு குளோரிபைடு கேரக்டருக்கு சஞ்சய் தத் மாதிரி புகழ் வாய்ந்த ஒருவர் வில்லனாக அமைவது இரண்டு கேரக்டருக்குமே தனித்துவத்தைத் தரும்.பிரசாந்த் நீலின் சரியான முடிவை பாராட்டலாம்.
கேஜிஎப் தொடர்பான நாற்காலி சண்டைதான் கதை. இதில் காதல் ,அரசியல் ,துரோகம் என கலந்து ஜனரஞ்சகமாக தருவதற்கு கதாசிரியர் பிரஷாந்த் நீல் மிகவும் பாடு பட்டிருக்கிறார். கேஜிஎப் உண்மை வரலாறு சோழர்கள் ,ஆங்கிலேயர்கள் என அவர்கள் காலம் தொட்டே ஆரம்பமாகிறது. 1799-ல் லெப்டினன்ட் வாரன் கண்டறிந்தான் .இவன்தான் திப்பு சுல்தானை போரில் கொன்றவன். பின்னர் லாவெல் என்கிற ராணுவ அதிகாரி சிண்டிகேட் அமைத்து கோலாரில் தங்கம் எடுத்தான்.
இந்த சரித்திரம் எதுவும் தலையை நீட்டாமல் கதையை அமைத்து அதை உயிரோட்டமாக தந்திருக்கிறார்கள் .
ஒரு நூலகத்தில் இருந்தபடியே நமக்கு கதையை சொல்கிறார் பிரகாஷ் ராஜ் . அருமையான குரல் வளம். அவருடன் மாளவிகா அவினாஷ் முட்டைக்கண்களுடன் சந்தேகம் கேட்கிறார். இவர்களது பணி அவ்வளவே என்றாலும் பிரகாஷ் ராஜின் கேரக்டர் மட்டும் தனித்துவம் பெற்றதாக இருக்கிறது.
யாஷ் ,சஞ்சய் தத் மோதலில் யாஷ் சுடப்பட்டு சாய்ந்ததும் அவ்வளவே அவர் கதை என சந்தேகிக்கும்படி காட்சி இருக்கிறது. அது இயக்குநரின் திறமை. எந்த ராக்கியை ( யாஷ் ) வீழ்த்தினாரோ அதே ராக்கி அவரை மாய்ப்பது வதம் போல அமைந்து இருக்கிறது. யாஷை விட தத்தின் நடிப்பு இந்த கட்டத்தில் தூக்கல்தான்.! பாலிவுட்டின் நாயகனுக்கு அந்த அளவுக்கு ஸ்பேஸ் கொடுக்கவில்லை என்றால் அது தர்மமாகாது. தத்தின் ஒப்பனையே படு மிரட்டல் . யாருடைய யோசனையோ.!பாராட்டுகள்.
ராக்கியுடன் ஒரு அரசியல்வாதி .சாணக்கியனோ.! அவர் ஒரு தமிழர்.பக்திமான் என்பது விபூதி கீற்று ,குங்குமப்பொட்டு. இவர்தான் பிரதமர் ராமிகா விடம் கோலார் 3 வைத்து சுரங்க வழியை காட்டிக்கொடுத்தவர். இவருக்கு இந்திய அமைச்சரவையில் முக்கிய பதவி வாங்கிக்கொடுத்ததே ராக்கிதான்.! கோலார் மொத்த சுரங்க ரகசியங்களை பெண் பிரதமரிடம் சொல்லி அழிவுக்கு காரணமாக இருந்த அவரை பாராளுமன்ற கட்டிடத்துக்குள்ளேயே நுழைந்து சபை நடக்கும்போதே சரமாரியாக சுட்டு ,கொல்வது ஹீரோயிசமாக இருக்கலாம்.ஆனால் லாஜிக்கை சவக்குழிக்கு அனுப்பிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
ரவீனா டண்டன் பிரதமராக வருகிறார் .நல்ல தேர்வு.
ஸ்ரீ நிதி ஷெட்டி இடத்தை பில் அப் செய்கிறார்.
இசைஇ ரவி பஸ்ரூர் .ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஆரம்பமாகிற அதகளம் முடியும் வரை நீடிக்கிறது.படம் முடிந்த பின்னர் மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற வேண்டியதுதான்.!
புவன் கவுடாவின் ஒளிப்பதிவு கதையுடன் பயணித்து ஒவ்வொரு காடசியிலும் பேசுகிறது.பாடுகிறது.ஆடுகிறது. வாழ்த்துகள் புவன்.இரு வண்ணங்களில் காட்சியை வகைப்படுத்தியிருப்பது நேர்த்தி.
படத்தின் நீளம் கதைக்குத் தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு?
படத்தை பார்க்கலாம்.