தாத்தா விஜயகுமார் ,அப்பா அருண் விஜய் ,பேரன் ஆர்னவ் ஆகிய மூவரும் நடித்திருக்கிற படம் ‘ஓ மை டாக் ‘. நாய் நடித்திருக்கிறபடம்தானே என்று சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. காரணம் இந்த படத்தின் ஆக்கமே நடிகர் சூர்யாவும் மனைவி ஜோதிகாவும் ஆவார்கள்.2 டி எண்டெர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பு.!
கண்டிப்பாக சமூகப்பார்வை இருக்கும். இந்த மக்களுக்குத் தேவையான கருத்து படத்தில் கண்டிப்பாக இருக்கும்.
படக்குழுவினருடன் மார்க்கண்டேயன் சிவகுமார் ,2 டி நிறுவன அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ,ஆர்.பி.டாக்கீஸ் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு ,ஆகியோர் கந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.
அருண் விஜய் ,தனது தந்தை விஜயகுமார் ,தனது மகன் ஆர்னவ் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
2டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் பேசுகையில், ” இந்தப்படத்தின் திரைக்கதைக்காக இயக்குநர் ஐந்து ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைத்திருக்கிறார். படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் மட்டும் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. படத்தில் நடித்த 100க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச தரத்திலான நாய் கண்காட்சி மற்றும் போட்டிகளுக்காக இந்தியாவில் யாரும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதில்லை. இதற்காக படத்தில் நடித்த சிம்பா என்ற நாய் குட்டியை, குட்டியாகவே வாங்கி இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளித்தோம். நிறைய கடின உழைப்பும் தேவைப்பட்டது.
ஏப்ரல் 21ஆம் தேதி அமேசான் பிரைம் விடியோவில் இந்தப் படம் வெளியாகிறது. டிசம்பர் மாதமே இந்தப் படம் வெளியாகி இருக்க வேண்டும். படத்தில் நாங்கள் 100 நாய்களுக்கு மேல் நடிக்க வைத்திருக்கிறோம். ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச நாய் கண்காட்சியில் படப்பிடிப்பு நடத்தினோம். இதையெல்லாம் திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அத்துடன் ஒவ்வொரு நாய்க்கும் பிரத்யேக அனுமதி கடிதம் வேண்டும் என கூறிவிட்டனர். இதற்கு மூன்று மாத காலம் அவகாசம் தேவைப்பட்டது. இருப்பினும் ஏப்ரலில் கோடைவிடுமுறையில் வெளியாவதால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறோம்.
இது குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் டிஸ்னியின் தரத்துடன் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் இருக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து மூன்று பாடல்களையும், பின்னணி இசையை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார். இதற்காக இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவிற்கு பிரத்தியேக நன்றி. சர்வதேச தரத்தில் இந்த படத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறோம். இதில் வெற்றி பெற்றிருக்கிறோமா..! என்பதை ரசிகர்கள்தான் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்.இந்த படத்தின் கதையை கேட்டு, நன்றாக இருக்கிறது படமாக உருவாக்கலாம் என முதலில் சம்மதம் தெரிவித்த சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”என்றார்.
நடிகர் விஜயகுமார் பேசுகையில், ” 2டி என்ற நிறுவனம் தரமான படங்களை தயாரித்து வருகிறது. இதற்கு அண்ணன் ( ? உண்மையா சார்.) சிவகுமார் தான் மூல காரணம். அவர் விதைத்த விதைதான் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது,‘ இது போன்ற அபூர்வமான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது’ என சிவகுமார் குறிப்பிட்டார் என்கிறார் விஜயகுமார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், ” வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. நானும் கிருஷ்ணன் பஞ்சு போன்ற ஏராளமான இயக்குநர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.
. இந்தப்படத்தின் சுவாரசியமான விசயமே தாத்தா =மகன்= பேரன் என்ற மூவரும் இணைந்து நடிப்பதுதான். இது மிகவும் அபூர்வமான விசயம். சிவாஜி வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு இருக்கிறார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன் பிறகு அதனை போல் மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான். இதற்காக நான் விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு தமிழக அரசு இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலை தயாரிக்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விசயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும் போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது. என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ஜெய்பீம் தான்.
எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், ‘இந்தப் பையன் ( சூர்யா) என்ன ஆகப் போகிறான்? என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம்தான்.
ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்கு தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்கு கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன்.
அந்த பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பை தொடர செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர். நாங்களும் வேறு வழி இல்லாமல் செயின்ட் பீட்ஸ் என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம். அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980=88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன். நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக்கொண்டே இருக்கிறான். இறுதியாக பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம் என்றார்.
அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் கதறி அழுகிறான். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று கதறி அழுகிறான். எங்க அப்பாவை சாலையில் நிற்க வைத்து விட்டார்கள் என கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். அதன்பிறகு அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.
அதன்பிறகு கல்லூரி படிப்பிற்காக லயோலா கல்லூரிக்கு சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், என் பையனுக்கு காலேஜ் சீட் வேண்டும் என கேட்டேன். அதற்கு அவர் ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள் என்று சொன்னார். நான் ஏன்? என்று கேட்டேன். நடிகர் பாலாஜி பையன், சிவாஜி பையன், கொட்டாரக்கரா பையன்… என திரையுலகினர் யாரும் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை என சொன்னார். ஆனால் என் பையன் நிறைவு செய்வான் என உறுதி கூறினேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார். ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் அரியர்ஸ் உயர்ந்தது. அப்போது அவனிடம் டிகிரியை முடிக்கவேண்டும் இல்லையென்றால்.. என கோபமாக சொன்னேன் அதன்பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான். அதன் பிறகு அவரிடம் எம் காம் என்று சொன்னேன். எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
அதன் பிறகு படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான். அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு செல்ல இருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார். என்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர், ‘அவர் சிவகுமாரின் பையன் சரவணன்’ என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு வாரம் கழித்து என்னை தொடர்புகொண்டு சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா? என கேட்டார். அப்போது அவரிடம் அவனுக்கு அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாட தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேசமாட்டான் என சொன்னேன். எனக்கும் இதுபோன்ற குணமான பையன் தான் வேண்டும் என்றார்.
டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக அழைத்துக் கொண்டு சென்றார். இப்போதும் கூட அவரிடம் அவன் வாழ்க்கையே நாசம் செய்துவிடாதீர்கள் என்றுதான் அறிவுறுத்தினேன். பிறகு வசந்த் இயக்கத்தில் படம் நடைபெற்றது. அந்த படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார் தான் சென்று வந்தார். அந்தப் படம் வெளியானது. நான் அப்போது படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். இந்தப் படம் காசி திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தார். அங்கிருந்த ஒருவர் கைகொடுத்து கைகுலுக்கி ‘சூப்பராக சொதப்பி விட்டீர்கள்’ என விமர்சனம் செய்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
ஆறு மணி காட்சி, அதன்பிறகு இரவு காட்சி என அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் படத்தைப் பார்க்கிறான். அதன்பிறகு எனக்கு போன் செய்து, ‘அது நானாப்பா.. நானா அப்பா அது.. வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம். டொரன்ட்டோவிலிருந்தும்…, வாஷிங்டனிலிருந்து போன் செய்தார்கள். பார்த்தேன் பல காட்சிகளில் நான் சிறப்பாக நடிக்கவில்லை.
திரையுலகில் ஒன்னுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவை செதுக்கினார்.
இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தை தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்த படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.