காத்து வாக்கிலே ரெண்டு காதல் -இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப படமும் கோடை கால குற்றாலமாக இருக்கிறது. வெயில் கொளுத்துகிற அளவுக்கு .சாரல் இல்லை.ஆனால் சுகம் இருக்கிறது.”மந்தமாருதம் தவழும் சந்திரன் வானிலே திகழும் இந்த வேலையே இன்பமே ” என இரட்டை காதலாக போகிறது. இரட்டைக் காதலிகளில் சமந்தாவுக்கு அப்லாஸ் அள்ளுகிறது !
நயன்தாராவின் முகத்தில் முதிர்ச்சி.முதுமை வளர்வதன் காரணமா?லேடி சூப்பர்ஸ்டாருக்கு ஜூனில் திருமணம் என்பது மெய்யாக இருக்கலாமோ?
ஆனால் சமந்தா அன்றலர்ந்த மலராக இருப்பதுடன் கேரக்டரை உள்வாங்கி உணர்வுகளை வெளிப்படுத்துவதில் கில்லாடியாக இருக்கிறார்.
இருதார திருமண சட்டம் இருந்தாலும் இரட்டைக் காளை சவாரி என்பதில் இன்னமும் நம்ம ஆட்கள் கில்லாடிகளாகவே இருக்கிறார்கள்.கதை ,இயக்கம் என பொறுப்பேற்றுள்ள விக்னேஷ் சிவன் படம் பார்க்க வந்தவர்களை சோதிக்கவில்லை .கோடை வெயிலை தணிக்கும் வகையில் தியேட்டருக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் வருவார்கள். காதலன் காதலியர் பேசிக்கொள்வதைப்போல வசனங்கள் இயல்பாக இருக்கிறது .”என்னை கல்யாணம் பண்ணிட்டான் ” என்று நயன்தாரா சொன்னால் ,”என்னைப் பண்ணிட்டான்”என ஒருவித சோகத்தில் சொல்வது கூட இயல்புதான். விடலைகளுக்கு குல்பி சாப்பிட்ட உணர்வு வரும்.! ஆபாசம் அப்பிக்கொள்ளாமல் நயன்தாராவை காட்சிப்படுத்தி இருக்கிறார் காதலர் விக்னேஷ் சிவன்.
சமந்தாவை தெலுங்குப்பட ரேஞ்சுக்கு காட்டா விட்டால் தமிழ் ரசிகர்களுக்கு செய்யக்கூடிய துரோகம் ஆகிவிடும் என விக்கி நினைத்திருக்கக்கூடும்.அதில் தவறு இல்லை.சமந்தாவை கொண்டாடுவார்கள் .
ராசி இல்லாத தோசியாக விஜயசேதுபதி சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இவரது நிழல் கூட தரையில் விழாது.அவ்வளவு ராசி. இதனாலேயே அவரால் பகலில் ஒரு காதலி ,இரவில் வேறு காதலி எனஅமர்க்களமாக இருக்க முடிகிறது.பரபரப்பு இல்லாமல் போகிறது கதை. பழக்கப்பட்ட பாதையில் வண்டி ஓட்டுகிறவர் கண் அசந்தாலும் மாடுகள் சரியாக இருப்பிடம் கொண்டு போய்விடும் என்பதைப்போல போகிறது .ஒரு தடக் தடக் இல்லை. பயணத்தில் பயமில்லை. திருப்பம் இல்லை ,இவையெல்லாம் மைனஸ் என்றாலும் செம்மை சாதிக்கவில்லை என்பது ஆறுதல் ,
சின்ன சின்னதாக பிரபு ,டான்ஸ் வாத்தியார் கலா ,கிங்ஸ்லி ,முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் முகம் காட்டிப்போகிறார்கள்.
அனிருத் இசையில் ‘நான் பிழை…’ ‘டூ டூ டூ’ செவிகளை துளைத்தெடுக்கவில்லை . கதிர், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.
காத்து வாக்கில ரெண்டு காதல் ,மனைவியுடன் ஒரு தடவை ,காதலியுடன் ஒருதடவை பார்க்கலாம்.!