
- பார்க்கலாம்.
- ஒரு தந்தையின் கடமை என்ன?
- சமுத்திரக்கனியின் கேரக்டர் நியாயமுடன் இருக்கிறதா?
- மகனின் கடமையை சிவகார்த்திகேயன் நிறைவேற்றியிருக்கிறாரா?
- பொறியியற் கல்லூரி எஸ்.ஜெ.சூர்யாவின் நோக்கம் சரிதானா?
- தனியார் கல்லூரிகளின் ஊடக விளம்பரங்களை பொதுமக்கள் நம்பலாமா?
- அல்லக்கை கேரக்டர்களை இயக்குநர் திணித்திருக்கிறாரோ?
இப்படியாக பல வினாக்களை நமக்குள் கேட்டுக்கொண்டு படத்தைப் பார்த்தபோது சிபி சக்கரவர்த்தியின் இயக்கம் 70 சதவிகிதம் நியாயம் பேசியிருப்பதாகவே கருத முடிகிறது.
கலவையான விமர்சனங்களை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கலாம்.அது இயல்பு.!
எஞ்சினியர் ஆகவேண்டும் என்கிற விருப்பம் உள்ளிட்ட எந்த விதமான சொந்த விருப்பத்தையும் மாணவன் மனதில் எழுத்தாணி கொண்டு தந்தை கீறக்கூடாது என்பதை வற்புறுத்தியிருக்கிறார்கள். தனக்குப் பெண் குழந்தைதான் பிறக்கவேண்டும் ..என காரணங்களை கற்பித்துக்கொண்டு எதிர்பார்த்த கனியின் ஆசை நிராசையாகி ஆண்குழந்தை சிவகார்த்திகேயனாகிவிட கனியின் ஆசையும் மாறுகிறது.அதுவே ஆசை கோடி சுமந்த மனதை திசை திருப்பிவிடுகிறது.உள்ளுக்குள் அன்பு பாசம் என வற்றாத உணர்வுகளாகவும் ,வெளியில் வெறுப்பைக் காட்ட வேண்டிய நிர்பந்தமுமாக இரட்டை வாழ்க்கை !
சொல்வது ,எழுதுவது எளிது. ஆனால் சொல்லவேண்டியதை நடிப்பின் வழியாக உணர்த்துவது ,அல்லது வெளிக்காட்டுவது என்பது சமுத்திரக்கனியினால் முடிந்திருக்கிறதென்றால் அதற்கு ஆசான் கே.பி.சாரிடம் பயின்ற கல்வி முதன்மையானது. திரை உலகப்பயத்தில் கற்றுக் கொண்ட நெளிவு சுளிவுகள் கரம் கொடுத்திருக்கின்றன. இதனை இவனால் செய்ய முடியும் என்கிற வள்ளுவப் பார்வை இயக்குநர்க்கு !பாராட்டுவோம்.
இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயனை விட்டால் வேறு எவரிருக்கிறார்.? உடல் எடை குறைத்து கம்பீரமுடன் பொருந்திப் போய்விட்ட கடைசி பெஞ்சு மாணவன். ஆடல் காட்சிகளில் அட்டகாசம்.அவரைப்போல ஆடுகிறார் ,இவரை தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு சிவகார்த்திகேயனுக்கு தனிக்கொடி.!கிளைமாக்ஸ் நெருக்கத்தில் ”அப்பாவின் பாதத்தை என்றாவது பார்த்திருக்கியா?”என்று அம்மா ஆதிரா கேட்டதும் ,பார்த்த மறுவினாடியே எஸ்.கே. “அப்பா”என பெருங்குரல் எழுப்புகிற ஒற்றை வார்த்தையில் மொத்த தியேட்டரும் ஒடுங்கிப் போகிறது.
கலகலப்பு மாணவர் பட்டாளத் தலைவன் ,லாஸ்ட் பெஞ்சு ஏரியா அதிபதி என இருந்தும் அந்த வட்டாரத்துக்கான கலாட்டா குறைவுதான்.!உயர்நிலைப்பள்ளி காலத்து கதையை குறைத்து கல்லூரி ஏரியாவை விரிவாக்கம் செய்திருக்கலாம்?அல்லது அல்லக்கை மாணவர்களுக்கு அளித்திருக்கிற அலுத்துப்போன காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம்.பிக்பாஸ் ஆட்களுக்கு அனாவசிய விளம்பரம் .ஆனால் சிவாவுக்கு அது நன்றிக்கடன்.!
வாழ்க்கையின் இலட்சியத் தேடல் ஒவ்வொரு மாணவனுக்கும் இருந்தாக வேண்டும் என்பதை வலியுறுத்துகிற கேரக்டர் சிவகார்த்திகேயனுக்கு.!
இதற்கு சற்றும் குறையாமல் ஒழுக்கப் போதகர்( ! ) எஸ்.ஜெ.சூர்யாவுடனான மோதுகிற சவால் மாணவன் என்கிற ஹீரோயிச தலைவன். இப்படி பன்முகம் . குறையொன்றும் இல்லை நடிப்பில் ,ஆர்வத்தில் என்கிற அதிக மதிப்பெண்களுடன் பாஸ் ஆகிறார் எஸ்.கே.
இந்த கண்களின் ஒளி வீச்சில் எத்தனை ஏவுகணைகள் என்கிற வியப்புடன் காட்சிகளை சுலபத்தில் கடந்து விடுகிறார் எஸ்.ஜெ.சூர்யா !இவர்தான் வில்லன் என்கிற பார்வையில் படைக்கப்பட்டிருந்தாலும் படத்தின் பேக் போன் சாட்சாத் சூரிய முதுகெலும்பு..!மாநாட்டில் தொடங்கிய திக்விஜயம் டானையும் கடக்கிறது.
பக்கா வில்லன் ராதாரவிக்கு கல்லூரி அதிபர் அந்தஸ்து கொடுத்து சைலன்சனாக்கி விட்டனர். அனிருத் வழக்கம் போல.! காலத்துக்கு ஏத்த பலகாரம்.!
நாயகியாக பிரியங்கா அருள் மோகன். அந்த ஸ்ரீராமனை பின் தொடர்ந்த ஜானகி பிராட்டியாரைப்போல,!
தனியார் கல்லூரிகளின் மோசடி விளம்பரங்களை ஆயிரம் ஒலிபெருக்கிகளை வைத்து கத்தினாலும் கேட்கப்போவதில்லை .டான் சொன்னால் மட்டும் கேட்டுவிடுவார்களா ?