உலக நாயகன் கமல்ஹாசனின் கைவிடப்பட்ட மருதநாயகம் ,சபாஷ் நாயுடு பட்டியலுடன் இந்தியன் 2 ம் இணைக்கப்பட்டு விட்டதா என்கிற சந்தேகம் தற்போது கோலிவுட் வர்த்தக வட்டத்தில் பேசப்படுகிறது.
இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.,உலகநாயகனின் அடுத்து வருகிற படங்களின் பட்டியலில் இந்தியன் 2 வை காணவில்லை. மெகா பட்ஜெட் படங்களில் முன்னர் இடம் பெற்றிருந்த இந்தியன் படம் தற்போது காணாமல் போனதற்கு காரணம் அது அமைதியாக நீக்கம் செய்யப்பட்டு விட்டதேயாகும் என்கிறார்கள்.!
கமல்ஹாசன் தற்போது ராஜமவுலியுடன் மகேஷ் பாபுவின் பான் இந்திய படத்துக்காக பேசிக்கொண்டிருக்கிறார். அதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது மதுரைக்கு நெருங்கிய தொடர்பான கதையை அடிப்படையாகக்கொண்டது. தற்போது இருவரும் கேன்ஸ்சில் இருக்கிறார்கள்.தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம், பின்னர் மகேஷ் நாராயணனுடன் ஒரு படம் ,இப்படி தொடர்ச்சியாக படு பிசியில் காலண்டர் போகிற நேரத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரிப்பதிலும் மும்முரமாக இருக்கிறார்.
இப்படியாக அவரது பட்டியல் கனஜோராக போகிறது. இதில் இந்தியன் 2 எங்கேயும் இடம்பெறவில்லை.
ஷங்கர் தரப்பில் விசாரித்தபோது அவர் இந்த வருடம் முழுவதும் ராம்சரணின் படத்தில்தான் இருக்கப்போகிறார். அந்தப்படம் 2023 -பொங்கல் ரிலீஸ்.இந்தியனை தொடர வேண்டுமானால் மறைந்த சின்னக்கலைவாணர் விவேக் தொடர்பான காட்சிகளுக்கு மாற்றாக ஒருவரையும் ,நாயகி காஜல் அகர்வாலுக்கு பதிலாக புதிதாக ஒருவரையும் இயக்குநர் ஷங்கர் கண்டு பிடித்து படத்தை முடித்தாக வேண்டும்.லைகா இந்தியனை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்கிற கனவில் இருக்கிறது.மேலும் 50 கோடியை இந்தியனில் முதலீடு செய்ய வேண்டிய நிலை .இதை ஏற்குமா லைகா ?
இந்தியன் 2 கைவிடப்பட்டதாக இந்தியா டு டே செய்தி வெளியிட்டபோது லைகா அதை மறுத்து “60 சதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த நிலையில் படத்தை கைவிடுவது சாத்தியமில்லை .இந்த படத்தை லாக் டவுன் முடிந்ததும் தொடர்வோம் “என்பதாக மே மாதம் 2020 -ல் லைகா தெரிவித்திருந்தது.