இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “ஆர்ட்டிகல் 15”. கிராமப்புறங்களில் நடைபெறும் சாதிய வன்முறைகள் குறித்த இப்படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியிருக்கிறது.
பொற்கால முதல்வர் டாக்டர் கலைஞரின் உள்ளம் கவர்ந்த தலைப்புதான் நெஞ்சுக்கு நீதி. திமுகழகத்தின் பொக்கிஷம். திராவிடத்தின் வரலாறு. அந்த தலைப்பில் அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் , தன்யா ரவிச்சந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படத்தினை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கிறார்.
படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
ஒரு கிராமத்திற்கு போலீஸ் உதவி கமிஷனராக பணி ஏற்க வருகிறார், உதயநிதி ஸ்டாலின்.
பதவி ஏற்ற நாளிலிருந்து அந்த கிராமத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
அந்த சம்பவங்களில் ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியினை சேர்ந்த 3 சிறுமிகள் காணாமல் போன வழக்கு. அதில் இருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில், இன்னொருவரின் நிலை மர்மமாக இருக்கிறது. இதை போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சக்கர்வர்த்தி மெத்தனமாக கையாண்டு வருகிறார். இதனால் உதயநிதி ஸ்டாலின் அந்த வழக்கை தனது நேரடி பார்வையில் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே உள்ள ஏற்ற தாழ்வு. உயர்சாதிக்குள்ளும் உள்ள ஏற்ற தாழ்வு இவைகளை சொல்லியிருப்பதால் , எந்த சாதியினையும் உயர்த்திப்பிடிக்காமல் சமரசமின்றி திரைக்கதை அமைத்திருப்பது இப்படத்தின் மிக சிறந்த வெற்றி.
உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கவைக்கிறது. பல காட்சிகளில் அவர் பேசும் வீரியமான வசனங்கள் கைதட்டலை பெறுகிறது.
உதயநிதியின் மனைவியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாரால் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட ஆரி இருவருடைய கதாபாத்திரமும் திரைக்கதைக்கு தேவையில்லாதவை என்றாலும் அதையும் சுவை குன்றாமல் கொண்டு சென்றிருப்பது இயக்குநரின் திறன் .
போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி, சூப்பர் சக்ரவர்த்தியாக வலம் வருகிறார். கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்துள்ளார். அட்டகாசமான நடிப்பு. மற்றபடி சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி உள்ளிட்டோர் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர்.
திபு நினன் தாமஸின் இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.
பெரிதாக கமர்ஷியல் அயிட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் படம் முழுவதிலும் ஒரு பரபரப்பும் சுவாரஸ்யமும் இருக்கிறது.
மேலும் இது ஒரு இந்தி படத்தின் ரீமேக் என்ற சாயல் எந்த இடத்திலும் வரவில்லை. இதற்காக அருண்ராஜா காமராஜை பாராட்டலாம்.