புகார் கொடுத்தவரை கோர்ட்டில் இழுத்தடிப்பதற்கு பயன்படுகிற ஆயுதம் ‘வாய்தா’.
இந்த ஆயுதத்தினால் சொத்துக்களை இழந்து மானம் மரியாதை இழந்தவர்கள் இன்றும் நாட்டில் இருக்கிறார்கள். இந்த வாய்தாவை இந்தப்படத்தில் எப்படி உருவகப் படுத்தி இருக்கிறார்கள்? நச் என சொல்லியிருக்கிறார்கள்.காரணம் கதாநாயகனாகஇருக்கலாமோ?
ஆம் ,கதாநாயகனாக நடித்திருப்பவர் இந்திய கம்யூ கட்சியின் தலைவர் சி.மகேந்திரனின் மகன் .பெயர் புகழ் . வராகா சுவாமி பிலிம்ஸ் கே.வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.
பெரியவர் மு.ராமசாமி, நாசர் ,பிரசன்னா (நக்கலைட்ஸ்.)ராணி ஜெயா ,மற்றும்பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் உதவியாளர் சேது முருகவேள் அங்காரகன் ஒளிப்பதிவு.அறிமுக இயக்குநர் என்றாலும் கெத்தாக கதை திரைக்கதை வசனம் எழுதி இருப்பவர் சி.எஸ்.மகிவர்மன் .வசனங்கள் இயல்பானவைகள் .சாதிய வெறியாட்டங்களின் தடித்த தோல்களை சவுக்கடியால் திருத்தம் செய்யப் பார்ப்பவை.
சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமம். சலவைத்தொழிலாளர் பெரியவர் அப்புசாமி ‘அயர்னிங் கடை ‘நடித்திவருகிறவர்.(மு.ராமசாமி )இந்த கிராமம் சாதிய கட்டுப்பாட்டில் இருக்கிறது .இயங்குகிறது என்றாலும் பிழையில்லை. அப்புசாமி மீது பைக்கை மோதுகிற வாலிபன் பயத்தில் பைக்கை அங்கேயே விட்டுவிட்டு போகிறான்.அப்புசாமிக்கு கை கால்களில் அடி .கட்டுப் போடுகிறார்கள். விட்டுப்போன பைக் யாருடையது என்பது தெரியாததால் அப்புசாமியின் மகன் புகழ் அதை வீட்டில் வைத்திருக்கிறார்.
இதன் பிறகுதான் சாதியம் சவுக்கு எடுக்கிறது.
பைக்கின் உரிமையாளர் ஆதிக்க சாதியை சேர்ந்தவர். முன்னாள் ஊராட்சித் தலைவரின் பிள்ளை .பைக்கை கேட்டு சென்றபோது பணம் கேட்டதால் ஆத்திரம். இதனால் பொய்யாக வழக்கு. தன்னுடைய பைக்கினை திருடி வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதாக புகார். இதனால் அப்புசாமியின் மகன் புகழை போலீஸ் இழுத்து சென்று அடித்து உதைக்கிறது.
வழக்கு நீதி மன்றம் செல்கிறது.இதன் பின்னர் என்னவாகும் என்பது ரசனைக்குரிய திருப்பங்கள்.!
பொதுவுடமைக் கடசித்தலைவரின் மகன் புகழுக்கு இயல்பாக வந்திருக்கிறது நடிப்பு. அந்த கேரக்டருக்கு ஏற்ப மிகாமல் குறையாமல் இருக்கிறது .காதலி ஒரு பக்கம் ,கடமை ஒரு பக்கம் ,தன்னை அயர்னிங் கடையில் உட்கார வைக்கப்பார்க்கிறாரே என்கிற ஆதங்கம் இன்னொரு பக்கம் என அல்லாடுகிறார்.
தந்தையாக வருகிற பெரியவர் மு.ராமசாமி. அந்த கேரக்டருக்கு உரிய மரியாதையை ,மதிப்பினை கூட்டியிருக்கிறார் என்பதே உண்மை. வாய்தாவினால் இழுத்தடிக்கப்படுகிற மனித உயிர் எப்படியெல்லாம் குத்திக் கிழிக்கப்படுகிறது என்பதற்கு ராமசாமியின் நடிப்பு நல்ல சான்று. கடைசியில் எல்லாமே வீண் என்றாகி அந்த பாட்டியும் பேரனும் கதறி அழுகிறபோது தியேட்டரே விம்முகிறது. இயக்குநர் மகி வர்மன் வெற்றிக்கு இது நல்ல சான்று.
நாயகியாக ஜெசிகா பவுல். உயர் சாதிப்பெண். சாதிய குறியீடுகள் இருக்கிற படத்தில் இவரது காதல், சலவைத் தொழிலாளி மீதுதான் இருக்க முடியும் என்கிற சினிமா சட்டம் இவரது வட்டமாகிறது.
நீதி மன்றம் வரை சாதியம் படர்ந்திருக்கிறது என்பதை சொல்வதற்கும் இந்த காலத்தில் தைரியம் வேண்டும். அது வாய்தா படக்குழுவினரிடம் தேவையான அளவுக்கு இருக்கிறது.
‘வாய்மையே வெல்லும்’ என்பதன் போட்டியாளர் வாய்தா என்பதை உணர்த்துகிற படம்.