ஆக்சன் ,ஹாரர் ,காதல் என எத்தனையோ வகையில் திரைப்படங்கள் வந்தாலும் கதையுடன் ஒட்டிய காமடி இருக்கிற படங்களின் தன்மையே வேற.! அருவியில் நனைவது மாதிரி.! சாரலின் துளி ஒவ்வொன்றும் சுகம்.
அதைப்போலத்தான் ஆர்.ஜெ.பாலாஜியின் கதையும்.!முக்கியமாக படத்தின் வசனங்கள் வெகு யதார்த்தமுடன் அரசியலையும் குட்டி வைக்கும்.
இவரது வீட்ல விசேஷம் படம் இரட்டை இயக்குநர் படம். ஆர்.ஜெ.பாலாஜி -என்.ஜெ சரவணன்.அந்த காலத்து கிருஷ்ணன் பஞ்சு ஸ்டைல் !
ஜீ ஸ்டுடியோஸ் .பே வியூ புராஜெக்ட்ஸ் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள கமர்ஷியல் படம். இந்திப்படமான பதாய் ஹோ வின் ரீ மேக். தைரியமாக முன்னதாகவே சொல்லிவிட்டார்கள் இது ரீமேக் தான் என்பதை.!
ஆடியோ வெளியீட்டு விழாவில் பி.வாசு ,கே.எஸ்.ரவிக்குமார் ,சுந்தர்.சி. ஆகிய மூவருமே திரி பலா சூரணம் போன்றவர்கள். இவர்களுக்கு மக்கள் இயக்குநர் என்கிற விருதினை வழங்கி கவுரவித்தனர்.
இயக்குநர் பி.வாசு பேசுகையில் “தயாரிப்பாளரும்,கதைகளுக்கு உயிர் கொடுக்கிற நடிகர்களும் கிடைத்து விட்டால் படத்துக்கு ஜீவன் வந்து விடும்.படத்தின் அனைத்துக் கூறுகளையும் மனதில் வைத்து திட்டமிட்டு எடுக்க வேண்டும் .
எனக்கு பிடித்தமான சத்யராஜ் நடித்திருக்கிறார்.நடிப்பு ராட்ஷசி ஊர்வசி நடித்திருக்கிறார்.அற்புதமான கூட்டணி.
தமிழகத்துக்கு வந்து இது போன்ற படங்களை தயாரிக்கிற போனிகபூருக்கு நன்றி .”என மனதில் படத்தை சொன்னார் வாசு.
வாசு சார் .! தமிழ்நாடு போனிகபூரின் மாமியார் வீடு!
அடுத்து பேசியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
“இந்த படத்தின் ரீமேக் உரிமையை முன்னதாக நான் கேட்டிருந்தேன். அது நடக்கவில்லை.!இந்த படத்தைப்பார்க்க நான் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன்.”என்றார் .
அடுத்துப்பேசிய சுந்தர்.சி. உரிமை எடுத்துக்கொண்டு பேசினார்.
“நான் அறிமுகப்படுத்தியவர் பாலாஜி.இன்று பன்முகத்தன்மை கொண்ட இயக்குநராக மாறி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.அவர் சிறந்த கிரியேட்டர் .”என்றார் .
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசுகையில் “இந்தப்படம் இந்தியை விட பெரிய வெற்றியைப் பெறும் .கேரக்டர்களுக்கு தகுந்த நடிகர்களை தேர்வு செய்வதில் பிடிவாதமாக இருப்பவர் பாலாஜி “என்றார் .
அனைவரும் பாராட்டித்தள்ளிய ஊர்வசி பேசிய போது “பழைய சத்யராஜை இந்த படத்தில் கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி. இந்த படம் வெளிவந்த பின்னர் ரஜினி சாரை இயக்கும் அளவுக்கு அவர் திறமைசாலி என்பதை பலர் உணர்வார்கள்..”என்று புகழ்ந்தார்.
அடுத்துப்பேசியவர் தயாரிப்பாளர் போனி கபூர்.
“நான் தமிழ் திரைப்படக் கலைஞர்களுடன் படம் எடுக்க நினைத்தேன்.அவர்களது ஒழுக்கம் பற்றி அறிந்து ஆச்சரியப்பட்டேன்.தமிழில் வெற்றி பெற்ற பல படங்களை நான் இந்தியில் எடுத்திருக்கிறேன்.என்னுடைய குடும்ப வாழ்க்கையும் தொழிலும் தென்னிந்தியாவுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும்.
ஊர்வசியை பற்றி என் மனைவி ஸ்ரீதேவி அதிகம் சொல்லுவார் .சிறந்த நடிகை என பாராட்டுவார்.ஊர்வசிதான் இந்த படத்தின் முதுகெலும்பு..
நான் அதிகமாக தமிழ்ப்படங்கள் எடுக்க விரும்புகிறேன். இந்த படம் பெரிய பிளாக் பாஸ்டர் என்பதில் சந்தேகமில்லை”என்று சொன்னார் போனிகபூர்.
நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,
“நான் கட்டப்பா போன்ற சீரியஸ் படங்களாக நடித்துகொண்டிருந்த போது, என்னுடைய பழைய கதாபாத்திரத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்பில்லாமல் இருந்தது. அதை எனக்கு மீட்டு கொண்டு வர வந்தவர் பாலாஜி. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்த காரணம் என்ன என நான் கேட்ட போது, உங்களுடைய பாவமான நடிப்பு எனக்கு தேவை என்று கூறினார். ஊர்வசி மேடம் இந்தியன் சினிமாவிற்கு கிடைத்த வரம். ஊர்வசியை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக செய்துவிடமுடியாது. அவர்களுடைய நடிப்பு அபாரமானது. அபர்ணா பாலமுரளி உடைய நடிப்பு சூரரை போற்று படத்தில் போல் சிறப்பாக இருந்தது. லலிதா போன்ற திறமை மிகுந்த நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களுடன் நடிப்பது எனக்கு சவாலாய் இருந்தது. ஆர் ஜே பாலாஜி, சரவணன் சிறந்த காம்போ, இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். தயாரிப்பாளர் ராகுல், மேனேஜர் விக்கி இந்த படம் சிறப்பாக உருவாக காரணம். நான் இந்த படம் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துகிறேன்.“என்றார்.
படம் குறித்து ஆர்.ஜெ. .பாலாஜி கூறுகையில்..,
“நான் இரண்டு, மூன்று வருடங்களாக காத்திருந்த மேடை இது. ஊர்வசி மேடம் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தொழில்நுட்பம், எதிரில் நடிப்பவர்கள், கதை எல்லாவற்றையும் மனதில் வைத்து நடிப்பை வெளிப்படுத்துபவர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி
இந்தியில் பல வெற்றிகளை கொடுத்துவிட்டு, தமிழில் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரித்துவிட்டு, என்னை வைத்து படம் எடுப்பது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் ராகுல் உடைய உழைப்பு அளப்பறியது. இயக்குனர் சரவணன் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. எங்களுடைய புரிதல் தான் எங்களை இரண்டு படங்களை உருவாக்கவைத்தது. அவர் என்னை பல இடங்களில் தாங்கிபிடித்துள்ளார். நான் தூரத்தில் இருந்து பார்த்த இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் சத்யராஜ் சாரை இயக்கியது எனக்கு சந்தோசம். அவர் நாம் கேட்பதை அப்படியே கொடுப்பார். தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். பா விஜய் சார் பாடலை ஒரே இரவில் எழுதி கொடுப்பவர். அவர் இப்போது வரை என் எல்லா படத்திலும் பாட்டு எழுதுகிறார். மக்கள் மனதில் அதிக நாள் நிற்க கூடிய பாடலை நாங்கள் உருவாக்க விரும்பினோம். கிரிஷ் அப்படிப்பட்ட பாடல்களை கொடுத்துள்ளார். சர்பட்டா, கர்ணன் போன்ற படங்களில் படதொகுப்பாளர் செல்வா, அவர் என் படத்தில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். இந்த படம் பலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. வீட்ல விசேஷம், குடும்பத்தோடு தியேட்டரில் பார்க்கும் படமாக இருக்கும். “என்றார்.