மருமகள் பிள்ளைத்தாய்ச்சியாகும் காலத்தில் மாமியார் வயிற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நின்றால் என்னவாகும்? ஊர், உறவு என்ன பேசும் ? இதை மய்யமாக வைத்து இந்தியில் படம் வந்து விட்டது என்றாலும் அதையே தமிழில் எடுத்தால் எப்படி இருக்கும்?
அதுவும் ஆர் ஜெ பாலாஜி எடுத்தால் சிரித்து சிரித்து வயிறு சுளுக்கி விடும் என்று சொல்லலாம். பொதுவாக இப்போதெல்லாம் பாலாஜியின் படத்துக்கு மினிமம் கியாரண்டி உண்டு. துட்டுக்கு சேதம் கிடையாது. நம்பிப்போகலாம்.!
அந்த நம்பிக்கையின் பேரில்தான் வடநாட்டு போனிகபூர் தமிழ்நாட்டு பாலாஜி மீது முதலீடு செய்திருக்கிறார்.
காலம் கடந்த பின்னர் (மெனோபாஸ் வராத நிலை.) அதாவது மருமகளை எதிர்பார்க்கிற நிலையில் ஒரு அம்மா கர்ப்பிணியானால் அவளை சமூகம் எப்படி பார்க்கும்? இதுதான் பாலாஜி கையில் கிடைத்த நூல் பந்து. அதை என்னமாய் பின்னியிருக்கிறான் மனுஷன்?
கொஞ்சம் கதையை பார்ப்போம்.
ரயில்வேயில் டி டி..ஆர் .சத்யராஜ் .மனைவி ஊர்வசி. இவர்களுக்கு கல்யாண வயதில் கட்டிளங்காளை பாலாஜி.ஹைஸ்கூல் போகிற பையனும் இருக்கிறார்கள். சத்யராஜின் அம்மா லலிதா . அடக்கமான குடும்பம். வயசானால் என்ன ‘அதுக்கு’ வயசாகலேன்னா என்னவாகும்? ஊர்வசி கர்ப்பம்.!!! இதை எப்படி அம்மாவுக்கும் மகன்களுக்கும் சத்யராஜ் சொல்லுகிறார்,அதன் ரியாக்சன் என்ன ,சமூகம் என்ன சொல்லுகிறது என்பதுதான் ‘வீட்ல விஷேசம்’ .நகைச்சுவை அபிஷேகம் நடித்த விடுகிறார் பாலாஜி. இவர்க்கும் பணக்காரப்பெண் காதலி அபர்ணாவுக்கும் நடக்கவிருந்த திருமணத்துக்கும் தடை விழுகிறது. இதெற்கெல்லாம் விடை காண்பதுதான் படத்தின் எஞ்சிய சிரிப்பு சாம்ராஜ்யம்.! செம.!
நிஜத்தில் கிரிக்கெட் வர்ணனையாளரான கதையில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிக்சரும் பவுண்டரியுமாக தூக்குகிறார்.இயல்பாக இருக்கிறது.
தம்பியும் அண்ணனும் மனம் விட்டு பேசும் அந்த குட்டிச் சுவர் காட்சி, திரையரங்கில் நாயகியுடன் தாய்மையைக் குறித்து விவாதிக்கும் காட்சி என படம் முழுவதும் சிரிப்புத் தோரணங்கள்.
சரி நம்ம சத்யராஜ்-ஊர்வசி இருவர் எப்படி?
சின்னப்பிள்ளைகளை விளையாடவிட்டு அதை ரசிப்பதில் பெரியவர்களுக்கு கிடைக்கிற சுகம் இருக்கே….அதே மாதிரியான சூழல் தியேட்டரில் இருப்பதற்கு அவர்களிருவர்தான் காரணமாக இருக்கிறார்கள்.
அபர்ணா அழகு.நடிப்பும் பாராட்டுக்குரியது.
வெறும் நகைச்சுவையை மட்டும் அனுபவிக்காமல் சில சமூக பொறுப்புகளும் நமக்கு உண்டு என்பதை வசனங்கள் .காட்சிகள் வழியாக சொல்லியிருக்கிறார்கள். அவசியமானது.
“சாரே சாரே சாம்பார் “பாடல் ஆட வைக்கிறது.
கார்த்திக் முத்துக் குமாரின் ஒளிப்பதிவு சூப்பர்.
“வீட்ல விஷேசம் ‘ சுற்றம் சூழ பார்க்கலாம்.!