ஜெயலலிதாவின் உடல் நல நிலவரம் எவ்வளவு மர்மமாக வைக்கப்பட்டிருந்ததோ ,அதே மாதிரியான நிலையைத்தான் கேப்டன் விஜயகாந்தின் உடல் நலம் தொடர்பாகவும் வைத்திருக்கிறார்கள்.
எல்லாமே அரசியல்தான்.!
கேப்டனின் உடல் நலம் பற்றிய உண்மையான நிலவரம் நாட்டு மக்களுக்கு தெரியாது. கேப்டனின் குடும்பத்தினர் உண்மையைச் சொல்லவில்லை. சிறந்த அரசியல்வாதியாக இருந்த கேப்டன் இன்று தன்னைப்பற்றிய ‘உண்மை’தனக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அவரால் பிறர் உதவி இல்லாமல் வசதியாக உட்கார முடியாது. எழ முடியாது. தன்னிச்சையாக நடக்க இயலாது.அடுத்தவர் துணை வேண்டும். வார்த்தைகள் வசப்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் அறிந்த கேப்டன் இப்படித்தான் இருந்தார். ஆட்களை அடையாளம் காண்பது சற்று சிரமமாக இருந்தது.
அவருக்கு நெருக்கமான செய்தியாளர்கள் கூட தற்போது சந்திக்க முடிவதில்லை. அவரது இல்லம் இரும்புக்கோட்டையாக மாறி இருக்கிறது. மக்களால் போற்றப்படுகிற அந்த மாமனிதனின் உடல் நலம் மறைக்கப்படுகிறது.
“கால் விரல்கள் அகற்றப்பட்டுவிட்டன” என்கிற தகவலால் திரை உலக நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அவரது விசுவாசமான ரசிகர்கள் விம்முகிறார்கள். கட்சிக்காரர்கள் திசை தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
தற்போது தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில் கால் விரல் நீக்கப்பட்டது என்கிற உண்மை வெளியாகி இருக்கிறது. சர்க்கரை நோய் எந்த அளவுக்கு அவரை பாதித்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது. முழுமையான உடல் நல விவரம் மக்கள் முன்னால் வைக்கப்படவேண்டும்.
ஆகவே மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய அவசியம் கேப்டனின் மனைவி திருமதி பிரேமலதாவுக்கு இருக்கிறது.
அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது சினிமா முரசம்.!