இயக்குனர் :என்.கிஷோர் ,ஒளிப்பதிவு ;ராம் பிரசாத், இசை :இசைஞானி ராஜா ,கலை : பாலசுப்பிரமணியம் .
சிபிராஜ் , தான்யா ரவிச்சந்திரன் ,ராதா ரவி ,கே.எஸ்.ரவிக்குமார் ,ஹரிஷ் பராடி ,பகவதி பெருமாள் ,
**************
முதலில் மூவரைப் பாராட்ட கடமைப் பட்டிருக்கிறோம். ஒளிப்பதிவாளர் ,இசை அமைப்பாளர் ,கலை இயக்குநர் .இவர்கள்தான் இந்தப்படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
இயக்குநரின் வித்தியாசமான பார்வைக்கு உயிரும் ,உயர்வும் தந்திருப்பவர்கள் இவர்கள்தான் . இவர்கள் இல்லையேல் பள்ளி கொண்ட பெருமாள் இல்லை.
பொதுவாக புகழ் கொண்ட ஆலயங்களில் புதையல்கள் இருக்கும் என்பது பாமரர்களின் நம்பிக்கை,அது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உண்மையானது என்பது நமக்கு கிடைத்திருக்கிற சத்தியமான ஆதாரம்.
இதை அடிப்படையாக வைத்துக்கொண்டு மாயோனுக்கு மலைக்கோவிலை அமைத்திருக்கிறார்கள். கலை இயக்குநர் பாலசுப்பிரமணியத்துக்கு சவாலான பணி .
இந்த மலைக்கோவிலில் ஐஸ்வர்ய சுரங்கம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தொல்லியல் துறை மலைக்கு வருகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இதன் தலைவர், சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் ,ஹரிஷ் பராடி ,பகவதி பெருமாள் உள்ளிட்ட ஒரு குழு இவரது செயல்படுகிறது. இவர்களில் கருப்பு ஆடு பராடி .
இந்த குழு புதையலைக் கண்டதா ,அல்லது கோட்டை விட்டதா ?
இதைத்தான் இயக்குநர் சற்றுத் தடுமாறியிருந்தாலும் சாமர்த்தியமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். ஆத்திகர்கள் மனம் கோணாமல் ,விஞ்ஞானத்தின் மாண்பினை சொல்லியாக வேண்டுமல்லவா! சொல்லியிருக்கிறார்.
அரசு எந்திரம் அது ஒன்றியமாக இருந்தாலும் சரி ,மாநிலம் சார்ந்ததாக இருந்தாலும் சரி லஞ்சம் ,ஊழல் என்பவை அவைகளின் பிறப்புரிமையாகி விட்டது. இல்லாவிடில் அமைச்சர் மாரிமுத்துவே நேரில் வந்து ரவிகுமாரிடம் பங்கு பேரம் நடத்துவாரா? மாரிமுத்து உச்சங்களுக்கு டப் கொடுக்கும் நடிகராக மாறியிருக்கிறார். சோதித்துதான் பாருங்களேன்!?
கொடுக்கப்பட்ட கேரக்டருக்கு நேர்மையுடன் நடந்திருக்கிறார்கள் சிபிராஜும்,தான்யாவும்.! நடிப்பு என்பது இயல்பாக இருக்க வேண்டும்.அந்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதைத்தான் கொடுக்கவேண்டும்.ஆரவாரமோ ,மிகையோ இதெல்லாம் ஓல்டு பேஷன்.!
பகவதி பெருமாளிடம் இயல்பு இருக்கிறது. !
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பற்றி சொல்லத்தேவையில்லை. அமைச்சரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ,பெராடியிடம் எப்படி கடிந்து கொள்ள வேண்டும் என்பதில் காட்டுகிற நளினமும் வெறுப்பும் சூப்பர்.
கந்தர்வப் பெண்கள் இசைக்கிற இசை தெய்வீகமும் ,தேனமுதமும் கலந்த அருவியாக செவிகளைச் சென்றடைகிறது பின்னணி. இசைஞானியின் இந்த கோர்வை ஆராதனைக் குரியது. கர்நாடக இசை வல்லுநர்கள் வணங்க வேண்டிய இசைக்கோர்வை.!!
தொடக்கத்தில் சொன்னபடி ஒளிப்பதிவாளர் ராம் பிரசாத் மலை ஏறி பெருமாளை ஆராதனை செய்திருக்கிறார். படத்துக்கு தக்க துணை.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு மாயோனில் விடை இருக்கிறது என்பதாக விளம்பரம் செய்தார்கள்.
உலகநாயகனுக்கு விடை சொல்லியிருக்கிறார்களா ? பார்த்து விடுங்களேன் புரிந்து விடும்.!
.