எழுத்து ,இயக்கம் : பத்ரி. தயாரிப்பாளர்: குஷ்பூ சுந்தர், ஒளிப்பதிவு :கிருஷ்ணசுவாமி , இசை :நவநீத் சுந்தர், மக்கள் தொடர்பு: ரியாஸ் அக்மத் .
நடிகர்கள் – சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர்.
#################
பல்லாண்டுகளுக்கு முன்னர் பவனி வந்த பட்டாம் பூச்சி இல்லை.
இயக்குநர் ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் வெளியாக வேண்டிய ‘உணர்ச்சிகள்’ திரைப்படம் ,( கமல்ஹாசன் நடித்திருந்தது.) தணிக்கைக் குழுவின் தடையினால் வெளியாவதில் சிக்கல்.
அதனால் ஏ.எஸ்.பிரகாசம் இயக்கிய ‘பட்டாம்பூச்சி ‘படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகிறார் உலகநாயகன் .அந்தப் படமும் திரில்லர் ரகம்தான். ஹிட் ஆன படம்.
தற்போது வெளியாகி இருக்கிற பட்டாம்பூச்சி வேறு ரகம். “அப்பன் நல்லவன்டா ” ன்னு சொல்லப்பட்ட அப்பன்களையெல்லாம் தேடிப்பிடித்து மர்டர் பண்ணுகிற சைக்கோ கில்லாடியின் கதை.1989 களில் நடப்பதாக சொல்கிறார் பத்ரி.
தமிழ்ச்சினிமாவில் , கோரமான கொலைகளை செய்கிறவன்களுக்கெல்லாம் விசித்திரமான நோய் இருப்பதாக காட்டிவிடுவார்கள்.
இந்த கதையில் ஜெய்க்கு டூஸ் (Tourette Syndrome )என்கிற வியாதி. கழுத்தை படக் படக்னு வெட்டிக்கிட்டு இழுக்கிற மாதிரியான வியாதி. சிரமப்பட்டு செய்திருக்கிறார்.
சிறு வயதிலேயே தந்தையினால் அடி உதை ,சித்திரவதை , மிகவும் மோசமான மன அழுத்தம் ,மனச்சிதைவு .ஒரு கட்டத்தில் அடக்க முடியாமல் வெடித்து சிதறுகிற ஜெய்க்கு கொலை செய்வதுதான் ஆறுதலாகிறது.
அவ்வப்போது ஜெய் வருகிற காட்சிகளிலெல்லாம் ஒரு டுவிஸ்ட்டை போடுவது ரசிக்க முடிகிறது. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஜெய் “நான் இந்தக்கொலையை செய்யல .செய்யாத கொலைக்கு தண்டனை கொடுத்திருக்காங்க. ஆனா 7 கொலையை பண்ணிருக்கேன்” என்று போலீசுக்கு ஒரு பிட்டைப்போட்டு பேதி மாத்திரை கொடுப்பார்.
இந்த டைப்பில் போலீஸ் அதிகாரி சுந்தர்.சியைஅவ்வப்போது சுத்தலில் விடுவார் ஜெய் .ரசிக்க முடிகிறது.ஆனால் ஜெய்க்கு கிடைத்துள்ள திறமையான அந்த கேரக்டரில் அவ்வப்போது தளபதி விஜய் ஒ…ட்….ட்….டிக் கொள்வது ஜெய்க்கு நல்லதல்ல.!! ஜெய் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பனைக் கொன்றுவிட்டு அவனைப் புதைத்தாலும் பூமிக்கு சேதம் எரித்தாலும் காற்றுக்கு ஆபத்து அதனால் அந்த உடலை சாப்பிட்டு விட்டேன் என்று நடித்துக் காட்டுகிற இடம் ஜெய்க்கு சிறப்பு.
போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி.. சைக்கோ கொலைகாரன் ஜெய்யை பிடித்து ,பின்னர் அவரை தப்ப விடுகிற ஏமாளி இன்ஸ் .
பத்திரிகையாளராக ஹனி ரோஸ் .இந்த கேரக்டரில் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கலாமோ என்கிற எண்ணம் வராமல் இல்லை. இவரது சிறப்பான நடிப்பு பிற்பாதியில் வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர் கொலைகாரனை பல முறை சுத்தியலால் ஓங்கி அடித்தும் அவன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தட்டி விடுவது நம்பும்படியாக இல்லை. ஒருவேளை ஒன்றரை டன் வெயிட் இல்லியோ.!
காவலராக வந்து மகளை சைக்கோ கில்லரிடம் பறி கொடுக்கிறார் அண்ணாச்சி . ஜீவன் இருக்கிறது நடிப்பில்! ஆனால் கண்ணாமூச்சி ஆடுவது மாதிரியாக இருக்கிறது அந்த துரத்தல் வேட்டை .
மொத்தத்தில் என்னமோ தெரியவில்லை ,பட்டாம் பூச்சியில் சுந்தர்.சியும் இல்லை ,அவரது ஆட்டமும் இல்லை.பூச்சி பறக்கவில்லை.!