இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (ISRO) மூத்த விஞ்ஞானி, நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம், ராக்கெட்ரி: தி நம்பி விளைவு. நடிகர் மாதவன் முதன் முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். அதீத மிகைப்படுத்தல் இன்றி, தேவையான அளவில் சினிமா பாணியில் கொடுத்துள்ளார். இந்திய விண்வெளி விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கும் விதத்தினில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படம், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் பெருமை சேர்க்குமா? பார்க்கலாம்.
இந்தியாவின் மிகத்திறமை வாய்ந்த விஞ்ஞானிகளில் ஒருவர் நம்பி நாராயணன். நாட்டின் மேல் தீவிர பற்றுக்கொண்டவர். அவரது தலைமையில் ராக்கெட் இன்ஜின் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். போதிய தொழில்நுட்பமும், நிதியும் இல்லாமல் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. அதன்பிறகு ஃப்ரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் முயற்சி செய்யப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் தொடர் நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பம் மற்ற நாடுகளிடமிருந்து கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது. நம்பி நாராயணனின் கடும் முயற்சிகளுக்குப் பிறகு ரஷ்யாவின் சில கிரையோஜெனிக் இன்ஜின் பாகங்கள் கிடைக்கிறது. அதை அவர் பாகிஸ்தான் வழியாக இந்தியா கொண்டுவருகிறார். இந்நிலையில் இந்திய விண்வெளி ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக கைது செய்யப்படுகிறார். இதன்பிறகு நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களின் தொகுப்பு தான் ‘ராக்கெட்ரி’ படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
மாதவன், இயக்குனராகவும் நம்பி நாராயணனாகவும் இரட்டிப்பு வெற்றி பெற்றிருக்கிறார். நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை சுவாரஸ்யமாகவும், உணர்வுபூர்வமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருப்பது இயக்குனர் மாதவனின் வெற்றி. நம்பி நாராயணனை இளமை முதல் முதுமை வரை அப்படியே பிரதிபலித்திருப்பது நடிகர் மாதவனின் வெற்றி. குறிப்பாக தொப்பையுடன் சிரத்தை எடுத்து நடித்திருப்பது வெகு சிறப்பு.
சிம்ரன் மற்றும் படத்தில் விஞ்ஞானிகளாக நடித்திருக்கும் நடிகர்கள் மட்டுமின்றி படத்தில் நடித்த அனைவரும் மிகச்சிறப்பான நடிப்பினை கொடுத்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கேற்ற சிறப்பான தேர்வு.
மாதவனை சாம் மோகன் ஜெயிலில் சந்திக்கும் காட்சியில் நெகிழ்ச்சி ஏற்படுகிறது. இருவருக்குமான வசனங்கள் அருமை!
ஒளிப்பதிவாளர் சிர்ஷாரேயின் ஒளிப்பதிவும், சாம் சிஎஸ்சின் இசையும் மொத்தப்படத்தினையும் சீர்தூக்குகிறது. இதோடு விஷுவல் எஃபெக்ட்ஸ் சின் தரமும் கூடுதலாக சேர்ந்துகொள்கிறது.
இந்திய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது.