பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கடத்துவது என்பது ஓல்ட் பேஷன். அதுக்குப் பதிலாக நிறை மாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து அந்த குழந்தையை கடத்துவது என்பது நியூ பேஷன் தானே!
இயக்குநர் கிருஷ்ண பரமாத்மாவின் புத்தம் புதிய அணுகுமுறையில் வந்திருக்கிற ஜோதியில் பிரகாசம் இருக்கிறதா ?
படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை போலீஸ் காரில் நெடிய பயணம். புலனாய்வு செய்கிறார்களாம். வெற்றியும் இளங்கோ குமரவேலும் பேசிக்கொண்டே பயணிக்கிறார்கள்.
அக்காவின் சொத்துக்காக ஆசைப்பட்டு தங்கை கடத்தியிருப்பாளா குழந்தையை ? வயிற்றைக் கிழித்து குழந்தையை கடத்துகிற அளவுக்கு கோரமான மனம் உள்ளவளா அவள்?இப்படி ஒவ்வொருவராக ஆராயப்பட்டு கடைசியில் மாட்டுகிறவர் ஷீலா ராஜ்குமாரின் டாக்டர் கணவன்தான் அந்த கொடூரன் ..குழந்தை வியாபாரி.
தன்னுடைய குழந்தையின் சாவுக்கு அந்த டாக்டர்தான் காரணம் ஆகவே அந்த டாக்டரின் பிள்ளையை பலி வாங்குவோம் என்று ஒரு டிவிஸ்ட்டை சொருகுகிறார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால் கஷ்டப்பட்டு மீட்கப்பட்ட குழந்தையை தானம் செய்கிறாள் தாய் ஷீலா என்று கதையை முடிக்கிறபோது சீத்தலை சாத்தனார் மனநிலைக்கு வந்து விடுகிறோம்.
சின்ன பட்ஜெட் படம் பண்ணுகிறோம் என்று ரசிகர்களை சோதனை செய்யக்கூடாது.
ஜோதி –வெளிச்சம் இல்லை.!