தந்தையின் இழப்பு தாங்காமல் தவிக்கும் காளிதாஸ் ஜெயராம் மன நல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு சிகிச்சைக்காக தான்யா ரவிச்சந்திரன் ,ரேணுகா கருணாகரன் உள்ளிட்ட சிலரை சந்திக்க நேரிடுகிறது .
அங்குதான் ஒரு பயணத்துக்கான திட்டம் தயாராகிறது.
அந்த பயணம் எதை நோக்கி செல்கிறது ,என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நெஞ்சுருக சொல்லியிருக்கிறார்கள் ‘பேப்பர் ராக்கெட்” விட்டு.! கவனத்துக்குரிய இணையத் தொடர்.
தொலைக்காட்சிகளில் வருகிற தொடர்கள் குடும்பத்தை கெடுக்கின்றன என்கிற குற்றச்சாட்டு அழுத்தம் பெற்று வருகிற காலத்தில் இப்படியாக ஒரு தொடர் ,நெஞ்சினை உலுக்கும் வகையில் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
காளிதாஸ் ஜெயராமுக்கு நல்ல வேடம். அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார், சிறிதுகூட எதிர்மறை எண்ணம் இல்லாத அவருடைய கதாபாத்திர வடிவமைப்பு அழகு மற்றும் ஆச்சரியம்.இதைத்தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
தான்யா ரவிச்சந்திரனின் நோய் என்பது மிகையான ஆத்திரம்தான்.! இந்த கோபத்தை அடிப்படியாக வைத்துக்கொண்டு ஆதிக்க ஆண்வர்க்கத்தின் மண்டையை உடைக்கிறார்கள், முகத்தில் அறைகிறார்கள். சிறப்புடன் நடித்திருக்கிறார் தான்யா .
ரேணுகாவின்கேரக்டர் ஆத்திரப்படவைக்கிறது .கொடுமையானது, ஆனால் அதையும் இரசித்துப் பார்க்கும்படி வடிவமைத்ததும் அதற்கேற்ப அவர் வழக்கம்போல் வாயாடுவதும் ஆறுதல்.
கருணாகரன் கதாபாத்திரம் வித்தியாசமானது. கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன்னை உயர்த்திக் கொண்டு வருகிறார்.
காளிவெங்கட், சின்னிஜெயந்த்,ஜிஎம்,குமார்,அபிஷேக், பிரியதர்ஷினி உட்பட ஏராளமானோர் இருக்கிறார்கள்.
தொடரின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் சென்னை கூட புதிய பதிப்பாக தெரிகிறது.சிறப்பு.சைமன் கே கிங், தரன்குமார், வேத்சங்கர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். சித்ஸ்ரீராமின் பாடல் உருகவைக்கிறது
எழுதி இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, மனித உணர்வுகளுக்குள் பயணப்பட்டிருக்கிறார். இவருக்கென தனி இடம் தமிழ்ச்சினிமாவில் கிடைத்திருக்கிறது.
ஆனால் தொடர் முழுக்க அன்பு பாசம் காதல் ஆகியனவற்றை நிறைத்து நம்மைப் பல இடங்களில் அழவைத்து மனதுக்கு நெருக்கமாகியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.