இயக்குநர் சிகரத்தின் இயக்கத்தில் முன்னர் உலகநாயகன் நடித்து வெளியாகியிருந்த படத்தின் பெயரும் ‘பொய்க்கால் குதிரை.’
பிரபு தேவா ஒற்றைக்காலுடன் நடித்து இப்போது வெளியாகிய படத்தின் பெயரும் ‘பொய்க்கால் குதிரை’.
ஆனால் கதையின் தளம் வேறு .
சந்தோஷ் பி.ஜெயக்குமார் எழுதி இயக்கியிருக்கிற படத்தில் நாயகன் பிரபு தேவா.
இவள்தான் அம்மா என்று மகள் மீது உயிரையே வைத்திருக்கிற ஒரு அப்பன் படுகிற துயரங்களை வெகு இயல்பாக பதிவு செய்திருக்கிறார் பிரபு தேவா.
விபத்தில் ஒரு கால் இழந்த நாயகன் பிரபுதேவா செயற்கை காலுடன் அன்பான மகளுடன் வாழ்கிறார். உயிரை குடிக்கிற நோயை குணமாக்க ஆபரேஷன் செய்தாக வேண்டும் அதற்கு 75 லட்சம் பணம் கட்டியாக வேண்டும் என்கிற நெருக்கடியில் பிரபு தேவா என்னென்ன வேலைகளை செய்கிறார்,அவையெல்லாம் அவரை எப்படி பந்தாடி பற்களை உடைக்கிறது என்கிற வழக்கமான பார்முலாவுக்குள்தான் கதை பயணிக்கிறது.
குழந்தை கடத்தல் என்பது நமக்கும் நாட்டுக்கும் புதிது இல்லை. ஆனாலும் இந்த பொய்க்கால் குதிரை வித்தியாசமாக ஆட்டம் போடுகிறது. பொய்க்கால் குதிரை -2 வுக்கும் அடிக்கல்லை போட்டிருக்கிறார்கள்.
படத்தின் பழு முழுவதும் பிரபு தேவா மீது.! ஆடல் அரசனை அக்கினியில் நடக்க விட்டிருக்கிறார்கள் .”இப்படி ஒரு நோயா ,”என கலங்குவதாகட்டும், “மகள் கடத்தப்பட்டாள்” என்பதை அறிந்து துடிப்பதாகட்டும் ,எதிரிகளுடன் சண்டையிட்டு வானத்தில் கர்ணம் அடிப்பதாகட்டும் எல்லாமே பிரபுதேவாவை புதிய கோணத்தில் காட்டுகின்றன .பி.தேவாவின் எனர்ஜி துணையாக நின்றிருக்கிறது
அடுக்கு அடுக்காக சம்பவங்களை இயக்குநர் கொண்டு சென்று சஸ்பென்ஸை விடுவிக்கிறார். இதனால் யூகிக்க முடியவில்லை என்பது உண்மைதான்.
ஒரு கட்டத்தில் வரலட்சுமியின் கணவன்தான் கொலைகாரனாக இருப்பான் என்பதை உணர்த்தி விட்டு அதன் பின்னர் வரக்கூடிய நிகழ்வுகளை வசனம் வழியாக சொல்லுவது இழுவையை தவிர்க்க உதவி இருக்கிறது.ஜான் கொக்கேன் சிறப்பாக நடித்திருக்கிறார். தன் மகளையே தீர்த்துக்கட்ட சொல்லுவதை நம்ப முடியவில்லை.இந்த அளவுக்கு அந்த ஆள் கொடூரன் என்பதை வலிந்து சொன்னது போல தெரிகிறது.
வரலட்சுமி சரத்குமாரின் கம்பீரத்துக்கு சரியான கேரக்டர். தன்னுடைய உதவியாளர்களுக்கு கட்டளையிடும் பாணி இயல்பான திமிர் கலந்து இருக்கிறது.
பிரகாஷ்ராஜ் கேரக்டர் அவசியம் தானா?
சாம் ஒரு காட்சியில் மட்டும் வருகிறார். .பொ குதிரை 2 -ல் அதிக வாய்ப்பு இருக்கலாம்.
இமான். வித்தியாசமாக இருக்கிறது பின்னணி இசை !
பொய்க்கால் குதிரை பிரபுதேவாவின் பெஸ்ட் மூவி என தைரியமுடன் சொல்லலாம்.