சாருவின் எழுத்துகளை ரசிக்கிறவர்களும் இருக்கிறார்கள். பெர்சிய கவிஞன் நிஜாமியின் எழுத்துக்களை காதலிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
பெர்சிய கவிஞனை ரசிக்கிறவர்கள் சீதா ராமம் படத்தை காதலிப்பார்கள். காதலின் மேன்மையை அனுபவித்தவர்களாக இருக்கக்கூடும் .
இன்றைய மொழியில் சொல்வதென்றால் அந்த படம் ‘ தரமான சம்பவம்’
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்டை சேர்ந்த லெப்டினென்ட் ராம் ( துல்கர் சல்மான் ) எழுதிய கடிதத்தை சீதா மகாலட்சுமியிடம் கொடுக்கிற பொறுப்பு லண்டனில் படிக்கிற பாகிஸ்தானிய அபிரினிடம் ( ராஷ்மிகா ) கொடுக்கப்படுகிறது.!
அபிரின் கொடுத்தாளா? அந்த கடிதம் அவ்வளவு முக்கியமானதா? இந்தியாவை வெறுக்கிற பாகிஸ்தானிய அபிரினிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? ராம் ,சீதா மகாலட்சுமி யார்?இதுதான் கதையின் அடித்தளம்.
சுவையான திராட்சை ரசத்தை வெள்ளிக்கிண்ணத்தில் கொடுத்திருக்கிறார்கள். டீ கிளாசில் சரக்கு அடிப்பவர்களுக்கு பிடிக்குமா என்பது தெரியாது.
இயக்குநர் ஹனு ராகவபுடிக்கு முதலில் வாழ்த்துகளை சொல்லிவிடலாம். அழகான காதல் ஓவியம் மட்டுமில்லை ,மனிதாபிமானம் ,தேசப்பற்று ,தியாகம் ஆகியவற்றையும் வலியுறுத்தி கதை பின்னப்பட்டிருக்கிறது.
1965 -ல் ராம் எழுதிய கடிதத்தை 1985-ல் பாகிஸ்தானிய இளம்பெண் மிகவும் பொறுப்புடன் கொண்டு வந்து சேர்ப்பதற்கு காரணமே அவள் அந்த ராமனால் காப்பாற்றப்பட்ட குழந்தை என்பதுதான்.! அவளை காப்பாற்றியதால் லெப்டினென்ட் ராம் அநாகரீகமாக ,அநியாயமாக பின்னால் கொல்லப்படுகிறான் என்பது பிறகுதான் தெரிய வருகிறது.திரைக்கதை சிறப்புடன் பின்னப்பட்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.லெப்டினன்ட் ராமாக துல்கர் சல்மான் , சீதா மகாலட்சுமியாக மிருணாள் தாகூர் இருவருக்குள்ளும் காதல் கரைந்து ரத்த நாளமாக ஓடுவதை உணர முடிகிறது.உன்னை நம்பி திலகத்தை நெத்தியில வச்சுக்கிட்டேன் மச்சானே என்பதைப்போல இசுலாமிய ராணியான மிருணாள் தன்னை இந்துவாக பாவித்து ராமிடம் நடந்து கொள்கிற காட்சிகள் மதங்களை கடந்து நிகழ்கிறது .அற்புதமான காட்சி அமைப்புகள். மதன் கார்க்கியின் எழுத்துகளை இணைத்துக்கொண்டு சுகத்தை தருகிறது. கதையின் முக்கிய உயிரோவியங்கள் இவ்விருவர்தான். சுருக்கமாக சொல்வதென்றால் இருவருமே வாழ்ந்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா மற்றொரு முக்கியமான கேரக்டர் .நிறைவாகவே செய்திருக்கிறார். இந்தியா மீதான வெறுப்பினை வெளிப்படுத்துகிற பாங்கு நன்றாகவே வந்திருக்கிறது,
சுமந்துக்கு வெயிட்டான கேரக்டர்.
ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் ,ஷ்ரேயாஸ் இருவரும் காஷ்மீர் மட்டுமின்றி அரண்மனையின் பிரமாண்டம் ,அழகியல் ,மற்றும் .இதர காட்சிகளை ஓவியமாக தீட்டியிருக்கிறார்கள் .வாழ்த்துகள் தோழர்களே!
விஷால் சந்திரசேகரின் இசை கிளாஸ் .அந்த கால கட்டத்துக்கு தகுந்தவாறு பின்னணி இசை சேர்க்கப்பட்டிருக்கிறது.
துல்கர் ,மிருணாள் காதலும் ,ஒளிப்பதிவும் இசையும் ,கிளைமாக்சும் தரமானவை உயர்வானவை.
எழுத்துக்களால் எவ்வளவு உயர்வாக எழுதினாலும் ,கண்ணால் பார்த்து ரசிப்பதற்கு ஈடாகாது.
ஆகவே திரையிலும் பாருங்கள். சில இடங்களில் கதை நகருவதை உணரலாம்.தொடக்கத்தில் சில காட்சிகள் தேவையற்றவை என்பது தெரிந்தாலும் மொத்தப்படமும் உங்கள் மனதில் இடம் பெறக் கூடும்.