பக்கத்து வீட்டுப் பையனாகவே பார்த்துப் பழக்கப்பட்ட தனுஷ் ஹாலிவுட் ,பாலிவுட் என்று பறந்தாலும் அந்த பையனை மறுபடியும் பார்க்கவேண்டும் என்கிற தவிப்பில் தமிழ் ரசிகர்கள் இருந்தார்கள்.
அந்த குறையை இந்தப்படம் நீக்கியிருக்கிறது. காதல் ,குறும்பு ,தவிப்பு ,கோபம் என கலவையாக பார்த்து ரசிக்கப்பட்ட தனுஷை ஜோமோட்டா மாதிரியான உணவு அயிட்டங்கள் டெலிவரி செய்கிற ஆளாக பார்த்தது தலைக்கறி சாப்பிட்ட உணர்வு.!
மித்ரன் ஜவகர் பத்தாண்டு இடைவெளி கடந்து திருச்சிற்றம்பலத்தை கொடுத்திருக்கிறார். 2010 -ல் உத்தமபுத்திரன் கொடுத்தவர் என்பதை நினைவில் கொள்க. சரி கதை என்ன?
அடுக்குமாடி குடியிருப்பில் தனுஷும் ,நித்யாமேனனும் தனித்தனியாக வாழ்கிறார்கள். நித்யா ஐ.டி .துறையில் வேலை பார்க்கிறார். தனுஷ் ஃ புட் டெலிவரி பாய். இருவருக்கும் இடையில் ஆழமான நட்பு. அது காதலா இல்லையா என்பது தனுஷுக்கு தெரியாவிட்டாலும் நித்யாவுக்கு தனுஷ் மீது கவர்தல் இருக்கிறது.
இந்த நிலையில்தான் ராசி கண்ணா ,பிரியா பவானி சங்கர் மீது தனுஷுக்கு தனித்தனி சம்பவங்களில் காதல் வருகிறது.உளத்தினால் வந்ததா ,கவர்ச்சியால் பிறந்ததா என்பது அறியாமலேயே வந்த காதல்.! இது ஒருபக்கம் இருக்க ,தனுஷின் சொந்த வாழ்க்கையில் சில இடர்ப்பாடுகள்.!
தனுஷின் அப்பா பிரகாஷ் ராஜுடன் மகனுக்கு பேச்சு வார்த்தை இல்லை. தாத்தா பாரதிராஜாதான் மீடியேட்டர் மாதிரி . அம்மா,தங்கையின் சாவுக்கு பிரகாஷ் ராஜ்தான் காரணம் என்கிற நம்பிக்கை அடிமனதில் வேர்விட்டது தான் காரணம்.! மித்ரன் ஜவகர் சாமர்த்தியமான திரைக்கதையினால் பதிவு செய்திருக்கிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் ஓம் நமசிவாய என எழுதுகிற தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் என்கிற பெயர். இதனால் அவரை பழம், பழம் என்றே கூப்பிடுகிறார்கள்.
இந்த கேரக்டருக்கு இவர்தான் சரியாக இருப்பார் என்று நடிகர்களை பார்த்துப் பார்த்து செலக்ட் செய்திருக்கிறார்கள்..இது படத்துக்குப் பெரிய பலம்.
குறிப்பாக ஷோபனா கேரக்டரில் நடித்திருக்கிற நித்யா மேனன். ரசிகர்களின் கனவுக்கன்னி.இந்த பெண்ணுடன் பழகும் வாய்ப்பு கிடைக்காதா என ஏக்கம் கொள்கிற அளவுக்கு கதையில் வருகிறார்.நடிக்கிறார். நம்மை கொள்ளை அடிக்கிறார்.லவ் யு ஷோபனா !
பாரதிராஜா ,பிரகாஷ் ராஜ் ,தனுஷ் மூவரில் பாரதிராஜா டாப்பில் இருக்கிறார். காதலுக்கு அவர் சொல்லுகிற விளக்கம் ,தத்துவம் சிறப்பு. காதலின் மாண்புகளை தன்னுடைய படங்களில் அற்புதமாக படமாக்கிய இயக்குநர் அல்லவா!காதலுக்கு இவர் டாக்டர்.!
தனுஷ், அலட்டிக்கொள்ளாத நடிப்பு! அம்மா, தங்கை மரணத்திற்கு காரணமான அப்பா பிரகாஷ்ராஜ் கட்டிலிலிருந்து கீழே விழும்போது அவரை தூக்கிவிடும் காட்சியிலும், ராஷி கண்ணாவிடம் காதலை சொல்லும் தருணத்தில், அவர் தனுஷூக்கு டிப்ஸ் கொடுக்கும் காட்சியிலும் தனுஷ் ஆக்சன் அண்ட் ரியாக்ஷன் சூப்பர்!
இதைப் போல் ராஷி கண்ணா, தனுஷிடம் கடலைபோடுவதற்கும், காதலுக்குமான விளக்கம் கொடுக்கும்போது, இருவரின் ரியாக்ஷனுமே சூப்பர்.
பிரியா பவானி ஷங்கர் ஒரு சில காட்சிகள் வந்தாலும் குறை சொல்லமுடியாத அளவிற்கு வந்து செல்கிறார்.
தாத்தாவும் பேரனும் ஒன்றாக உட்கார்ந்து சரக்கு அடிப்பது என்பது மிக சாதாரணமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பலரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் குடிக்கத் தூண்டுகிற அளவுக்கு படமாக்கி இருக்கிறது.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, மு.ராமசாமி ஆகியோர் சிறப்பாகவே நடித்து இருக்கிறார்கள்.
அனிருத் இசை, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜிகே எடிட்டிங் மூன்றுமே கதைக்கும் ,கமர்ஷியலுக்கும் காய் கொடுக்கின்றன. பாடல்களின் பலம் மேட்டில் இருக்கிறது.
சில தவறுகள் ஆங்காங்கே இருந்தாலும் ஒரு உணர்வுபூர்வமான காதல், பொழுதுபோக்கு படத்தினை கொடுத்து இருக்கிறார். இயக்குனர் மித்ரன் ஜவஹர்.
‘திருச்சிற்றம்பலம்’ தனுஷுக்கு ஒரு வெற்றிப் படம்!