‘அண்ணாத்தே’யில் ரஞ்சனா நடித்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினி “நீ தெலுங்குப் பொண்ணா ?” என கேட்டிருக்கிறார்.
அந்த அளவுக்கு சினிமா ,சீரியல் என பிற மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
அதே நேரத்தில் அசல் தமிழர்களும் சிறிய அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஓபிஎஸ் ,பாலா ஆகியோரின் உறவுப்பெண் ரஞ்சனா நாச்சியார் . மென்பொருள் பொறியியலில் எம்.எஸ்.சியும், மென்பொருள் பொறியியலில் எம் . டெக்., மற்றும் சட்டத்துறையில் எல்.எல்.பி (ஹானர்ஸ்)படித்து விட்டு சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.
அருள்நிதி நாயகனாக நடித்து அண்மையில் வெளிவந்துள்ள ‘டைரி’ திரைப்படத்தில்
பாசமுள்ள தாயாக, அதுவும் பேயாக நடித்திருப்பவர்தான் இந்த ரஞ்சனா.
இந்தப்பெண் எப்படி சினிமாவில்?
“எனக்கு முதன் முதலில் ஒரு தொலைக்காட்சித் தொடரில் தான் நடிக்க வாய்ப்பு வந்தது. திரு பிக்சர்ஸ் சார்பில் சன் டிவியில் வந்த ‘குலதெய்வம்’ தொடரில் நான் ஒரு பாத்திரத்தில் முதலில் நடித்தேன்.
சினிமா என்றால் முதலில் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ படத்தில் நான் ஒரே ஒரு காட்சியில் நடித்தேன். அதைப் பார்த்துவிட்டுத் தான் ‘இரும்புத் திரை’ பட வாய்ப்பு வந்தது. ஆனால் முதலில் ‘இரும்புத்திரை’ படம் வெளியாகி விட்டது.
“இந்தச் சினிமாவில் எத்தனையோ பேர் ஒரே ஒரு காட்சியில் நடித்து விட முடியாதா என்று பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்கு ஒரே ஒரு காட்சி தான் என்றாலும் அடையாளம் கண்டு கொள்கிற மாதிரி வசனத்துடன், குளோசப் வரும்படி எல்லாம் வருகிறது இந்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால் வளர்வாய் “என்றார் மிஷ்கின் .
அதுபோலவே நான் அந்தக் காட்சியில் நடித்ததில் பலருக்கும் என்னை அடையாளம் தெரிந்தது. இரும்புத்திரை படத்தில் படம் ஆரம்பிக்கும் போது வரும் காட்சியில் எனது கணவர் தற்கொலை செய்து கொள்வார். நான் தான் வருவேன். படம் முடியும் நிலையில் என்னுடைய பாத்திரத்தின் மீதுதான் கதை முடிந்து டைட்டில் கார்டு வரும்.ஒரே ஒரு காட்சிதான் என்று நாம் சினிமாவில் அலட்சியமாகக் கருதி விட முடியாது .அந்த வாய்ப்பை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொண்டால் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகள் வரும். நான் இரும்புத்திரையில் சிறு காட்சியில் வந்த அந்த செண்டிமெண்டில் அதே இயக்குநர் மித்ரன் எனக்கு அவரது ‘ஹீரோ’ படத்திலும் வாய்ப்பு கொடுத்தார்.
அடுத்தடுத்த படங்களில் எனக்கு சற்றே பெரிய பாத்திரமாக அதிகக் காட்சி வாய்ப்பு உள்ளதாகவும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. பில்லா பாண்டி, வேட்டை நாய்,
தேவராட்டம், ராஜ வம்சம்,கொம்பு வச்ச சிங்கம்டா ,எதற்கும் துணிந்தவன், சிவகுமாரின் சபதம், நட்பே துணை, அண்ணாத்த என்று ஐந்தாண்டுகளில் 15 படங்களில் நடித்து விட்டேன்.”
ரஜினியுடன் அனுபவம் எப்படி?
“மறக்க முடியாத அனுபவம்தான்.பெரியதாக வசனம் பேசி எல்லாம் நடிக்க வாய்ப்பு இல்லை
அவர் கூடவே நான் இருப்பது போன்ற காட்சிகள் நிறைய உண்டு. அதுவே எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியளித்தது.
மருதாணி பாடல் காட்சியில் ஊஞ்சலில் அவர் அமர்ந்திருப்பார் ஒரு பக்கம் சூரியும் இன்னொரு பக்கம் நானும் இருப்போம்.பாடல் காட்சியில் நான் நிறைய இடங்களில் வருவேன். வசனம் தான் பேசவில்லை என்றாலும் திரையில் தெரிவேன். போஸ்டர்களில் கூட அவர் அருகில் நான் இருப்பேன். அதைப் பற்றிப் பலரும் கூறிய போது எனக்கு பெரிய மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருந்தது.
படத்தில் நடித்த போது அவர் அருகில்தான் நான் இருந்தேன் என்றாலும்
நான் எதுவும் பேசாமல் அடக்கமாக இருந்தேன்.நான் எதுவும் பேசாமல் இருந்ததும் என்னைப் பார்த்து தெலுங்கா? என்று கேட்டார். இல்லை சார் நான் பச்சைத் தமிழச்சி என்றதுடன் எனக்கு ஊர் ராமநாதபுரம் தான் என்றேன். அப்படியா என்று கூறி பலமாகச் சிரித்தார்.
மற்றபடி நான் அவருடன் பேசத் தயங்கி அடக்கமாக இருந்து விட்டேன்.
அண்ணாத்த படத்திலிருந்து ரஜினி சாருடன் தோன்றியதை மட்டுமல்ல இயக்குநர் சிவா சார் எங்களை மிகவும் அன்பாகவும் மரியாதையாகவும் நடத்தியதை மறக்க முடியாது.
படப்பிடிப்பு முடிந்து விட்டால் உடனே அனுப்பி விடுவார். மற்றவர்கள் எல்லாம் நமக்கு வேலை இல்லை என்றாலும் படப்பிடிப்பு நேரம் முடியும் வரை காத்திருக்க வைப்பார்கள் .இது தொலைக்காட்சித் தொடர்களில் கூட நடக்கும். ஆனால் இயக்குநர் சிவா அவர்கள், நான் நடிக்க வேண்டிய பகுதி முடிந்தவுடன் என்னை அனுப்பி விடுவார். இவ்வளவு உயரம் வளர்ந்த நிலையிலும் அவருடைய பெருந்தன்மை வியக்க வைத்தது.”
‘டைரி ‘படத்தில் நடித்த அனுபவம் பற்றி?
‘டைரி ‘ நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. நடித்த போது இப்படித் தெரியவில்லை படமாகப் பார்க்கும் போது வேறு விதமாக இருந்தது.நான் திருமணம் ஆகி படித்துவிட்டு நடிக்க வந்துள்ளேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு இளைஞனுக்குத் தாயாக வந்ததை முதலில் இது சரிப்பட்டு வருமா? என்று கேட்டேன். எனக்கு ஒரு வித தயக்கமாக இருந்தது ஆனாலும் திரையில் பார்ப்பவர்கள் எல்லாம் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் மகிழ்ச்சி.அருள்நிதி நடிக்கும் படம் என்பதால் எதுவும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன்.
நான் வழக்கறிஞருக்குச் சட்டம் படித்து இருப்பதால் வழக்கறிஞர் தொழிலையும் தொடர விரும்புகிறேன். நான் ஒரு மசாலா நிறுவனம் தொடங்கி உள்ளேன் நாச்சியார் மசாலா என்று பெயர். அதையும் தொடர்ந்து செய்வேன். எல்லா பிரபலமான கதாநாயகர்களின் படங்களிலும் நான் நடித்து விட்டேன் .இப்போது நான் நடித்து ‘மாயன்’ என்ற பிரம்மாண்ட படம் வெளிவர உள்ளது .அதில் வில்லியாக நடித்துள்ளேன் தம்பி ராமையாவின் மகன் நடிப்பில் ‘லிவிங் டுகெதர் ‘ என்ற திகில் திரைப்படம் தயாராக உள்ளது. அதில் நான் நடித்துள்ளேன்.”
“பாலா உங்கள் உறவினர் என்கிற போது அவரிடம் நீங்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கவில்லையா?”
“முன்பே சொன்னேன் பாலா என்னுடைய சித்தப்பா. என் அப்பாவின் உடன் பிறந்தவர். ஆர்கே சுரேஷ் எனது உறவினர்தான்.
பாலா உதவி இயக்குநராக இருந்தபோது ‘வீடு’ படத்தில் ஒரு போஸ்ட் மேன் ஆக நடித்திருப்பார்.அவர் வரும் காட்சிகள் சில வினாடிகள் தான் இருக்கும். தான் நடித்திருப்பதாக எங்களை அழைத்துச் சென்று பெருமையாகக் காட்டுவார். இதோ வரப் போகிறேன் என்பார்.நாங்கள் உற்றுக் கவனிப்பதற்குள் அந்தக் காட்சி ஓடி விடும். நாங்கள் பார்க்கவில்லை என்று சொல்வோம். இப்படி 10 முறைக்கு மேல் நாங்கள் அந்தப் படத்தைப் பார்த்து இருக்கிறோம். மறுபடி மறுபடி அழைத்துச் சென்று காட்டியி ருக்கிறார்.
அப்படி அவர் சினிமாவில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். ஆனால் அவர் நான் சினிமாவில் நடிப்பதை ஏற்கவில்லை, எதிர்த்தார். அதைக் கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை சரிப்பட்டு வராது என்று கூறினார்.
அவர் மட்டுமல்ல ஓபிஎஸ் குடும்பத்திலும் எதிர்த்தார்கள்.எல்லாம் கடந்து தான் நான் அறிமுகமானேன். சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வந்தாலும் இப்போது நிறைய காட்சிகள் உள்ள பாத்திரங்கள் என்று வந்திருப்பது எனது வளர்ச்சி என்று நான் நினைக்கிறேன்.”
திரையுலகில் நீங்கள் எதுவும் பிரச்சினைகளைச் சந்தித்தது உண்டா ?
“பெண்கள் பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடுவதில் பயனில்லை. ஒவ்வொன்றையும் எதிர்கொண்டு சமாளித்து மேலே வர வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் தனது சவால்களை,தடைகளை, இடையூறுகளைச் சந்தித்து உயர்ந்து கொண்டிருக்கிறாள்.”என்றார் .