ஒருவனது வயதும் வசதியும் கூடும்போது ,கால மாற்றத்துக்கு ஏற்ப அவனின் வாழ்வில் இனிப்பும் கசப்பும் இருக்கும் என்பதை தைரியமுடன் சொல்லியிருக்கிறார்கள்.
டூ டி என பெயர் வைத்திருப்பது கதையில் வந்து போகும் நாயகியின் பிரியமான நாய்க்காக வா ?
எதைப்பற்றியும் கவலைப்படாமல் போதை ,போகம் என வாழ்கிற இசைக்கலைஞனுக்கு கல்யாணம் என்பது தேவையற்றது என வாழ்கிறவர் கார்த்திக் மதுசூதன் .குரலில் கம்பீரம்.
இந்த மனிதனின் மீது மயக்கம் கொள்கிறார் ஷ்ரிதா சிவதாஸ். 5 ஆண்டு கால நண்பனை கல்யாணம் செய்து கொள்ளவிருக்கும் இவருக்கு 7 நாள் பழக்கமான கார்த்திக் மதுசூதன் பிடித்துப்போக அதனால் 5ஆண்டு கால நண்பனை மறப்பதற்கு துணிகிறார்.
இதனால் என்ன நடக்கிறது?
துணிச்சலுடன் கதையை கொண்டு போயிருக்கிற இயக்குநர் கார்த்திக் மதுசூதன் காட் சிகளிலும் வேகத்தை காட்டியிருக்கிறார். கதையை எழுதியிருப்பதோடு படத்தொகுப்பாளர் சாம்.ஆர்டி எக்ஸ் உடன் இணைந்து திரைக்கதை வசனமும் எழுதியிருக்கிறார் கார்த்திக் மதுசூதன்.
தயாரிப்பாளரும் இயக்குனரும் நாயகனும் நானே என நம்பிக்கையுடன் காலம் இறங்கிவிட்ட கார்த்திக் மதுசூதன் வெயிட்டான நடிக நடிகையை இறக்கிவிட்டிருந்தால் இந்த படம் பேசப்பட்டிருக்கும்.ஷ்ரிதா சிவதாஸ் கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறாரா என பார்ப்பதை விட அந்த கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் நடித்திருந்தால் எப்படியிருக்கும் என்கிற எண்ணமே வலுவாக நிற்கிறது .
காதல் குறித்தும் ஆண் பெண் உறவு குறித்தும் படத்தில் பேசப்படுபவை நீண்ட விவாதங்களின் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது.
நாயகியின் பெற்றோராக நடித்திருக்கும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி ஆகியோரின் நிலை பரிதாபம். இப்படி ஒரு பெண்ணைப் பெற்றால் வேறு என்ன கிடைக்கும்?
இசையமைப்பாளர் கே.சி.பாலசாரங்கன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.
மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என் ஆகியோரின் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். காட்சிகள் உறுத்தாமல் இயல்பாக நகர வைத்திருக்கிறார்கள்.
சாம் ஆர்டி.எக்சின் படத்தொகுப்பு கச்சிதம்.
இளைய தலைமுறையினருக்கு பிடித்தமான படம்.!