சிதிலமடைந்த கட்டிடத்தில் இயங்குகிற சென்னை எழும்பூர் காவல் நிலையம்.
கடமையை உயிராக கருதுகிற ஏட்டய்யா.ஓய்வு பெறச்சொல்கிற முதுமை .காலில் கட்டுப் போட்டுக் கொண்டு காவல் நிலையத்தில் வேலை பார்க்கிற இன்ஸ்பெக்டர்.துணைக்கு ஒரு எஸ்.ஐ..
முதல் நாள் பிரசவிக்கப்பட்ட கைக்குழந்தையுடன் “ஐயோ ..என் பொண்டாட்டியைக் காணோம்.உதவிக்கு இருந்த பொம்பளையையும் காணோம் ,கண்டுபுடிச்சி கொடுங்கய்யா “என்று கதறிக்கொண்டே நுழைகிறார் கட்டிடக் தொழிலாளி கருணாஸ்.
கண்டு பிடித்தார்களா ,கருணாஸின் மனைவியும் துணைக்குப்போன பெண் ஆட்டோ டிரைவரும் என்ன ஆனார்கள் ,அந்த காவல் நிலையத்தை சுற்றி என்ன தான் நடக்கிறது என்பதை உயிர்த்துடிப்புடன் பதிவு செய்திருக்கிறது ஆதார்.!சமுதாயத்தில் நடக்கிற சில உண்மைகளை சொன்னால் வலிக்கத்தான் செய்யும் என்பதை துணிந்தே சொல்லியிருக்கிறார்கள்.அங்கே தவறுகள் ஆராதிக்கப்படுகின்றன ,வேறு வழி கிடையாது.
அண்மையில் இப்படியொரு கனமான கதை வந்ததில்லை என்று சொல்லுகிற அளவுக்கு இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் உலுக்கிவிடுகிறார் .
இதயத்தின் துடிப்பை அதிகமாக்கி விடுகிறார் கருணாஸ். இதுவரை சுமக்காத வெயிட். இந்த நடிகனின் திறமைக்கு சிறந்த நடிகன் என்கிற சிறப்பை சேர்த்திருக்கிறது.
கதறி அழுகிற கைக்குழந்தைக்கு பாலூட்ட தாயில்லையே ,வயதான தனக்கு மனைவியாக வாக்கப்பட்டு வாழ்க்கையின் அர்த்தமாக இருந்தவளை இழந்து விட்டோமா . என்ன செய்யப்போகிறோம் என்கிற தவிப்பு. சி.எம் .செல்லுக்கு லெட்டர் போட்டதால் போலீசிடம் உடைபடுகிற கருணாஸ் ..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..தி பெஸ்ட் ..சாமானியனின் வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் “சூப்பர்.!”
கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கையை வெகு இயல்பாக உயிரோட்டமுடன் காட்டியிருக்கிறார்கள்.நாலடி சதுர வீட்டுக்குள் ஆறடி உயரமுள்ள இருவர் நடத்துகிற குடும்பம் எப்படி வாழ்கிறது, பிரச்னைகளை சமாளிக்கிறது ,அதிகாரவர்க்கத்தின் சுயநலத்துக்கு இரையாகிற எளியவர்களின் வலி தான் ஆதார்.!
ஏழைகள் எப்படிப்போனால் நமக்கென்ன ,கிடைத்திருக்கிற அதிகாரத்தை வைத்துக்கொண்டு நாம் தப்பித்துக்கொள்வோம் என்று அப்பாவிகளை பலி வாங்கும் உயர் போலீஸ் அதிகாரி உமா ரியாஸ்கான்,,சூப்பர் கட்டை என வந்திருக்கிற இனியாவின் துணிச்சலான நடிப்பு, மேஸ்திரின்னா இப்படியும் வாழமுடியும் என பதிவு செய்திருக்கிற பி.எல்.தேனப்பன் ,இன்ஸ்பெக்டராக வரும் பாகுபலி பிரபாகர் இப்படி எல்லோரையும் பாராட்டலாம் .
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் இருக்கிற உயிரோட்டம் ஸ்ரீ காந்த் தேவாவின் இசையிலும் இருந்திருக்கலாம்.
கடமையை உயிராக மதித்து வாழ்ந்த ஏட்டய்யா அருண்பாண்டியனின் தற்கொலைக்கு காரணமென்ன என்று சொல்கிற பிளாஷ்பேக் சுருக்கப்பட்டிருக்கலாம் .இப்படி சில இடங்களில் திரைக்கதை அடி வாங்குகிறது ,வக்கீலாக வருகிறவனுக்கு நியூஸ் பேப்பர் நாலெட்ஜ் இல்லாமல் போகுமா ?
சூப்பர் படங்களில் இருக்கும் குறைகளை சகித்துக்கொள்கிற ரசிக பெருமக்கள் ஆதாரின் தவறுகளை பொறுத்துக்கொள்ள மாட்டார்களா?
ஆதார்…நமது கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம்.