“இன்னொரு பிள்ளை பெத்துக்கலாமா “என்று ஆசைப்படுகிற மனைவியின் வாயை அடைத்து விட்டு “இருக்கிற முதல் பிள்ளையே போதும்.வளர்த்து ஆளாக்குவோம்” என்று உறுதியுடன் சொல்கிற தனுஷ் ,அந்த குழந்தைக்காக நடத்துகிற பாசப்போராட்டமே படத்தின் கதை.
அந்த ஒற்றை மகளுக்காக அப்பா நடத்துகிற பாசப்போராட்டம் வெற்றி பெற்றதா ,வீணாப்போனதா என்பதை இயக்குநர் செல்வராகவன் அவரது பாணியில் சொல்லியிருக்கிறார்.
ரெட்டை பிள்ளைகளில் பிரபு ஒரு டைப். கதிர் வேறு டைப். இந்த இரண்டு தனுஷுகளுமே ஸ்கோர் செய்கிறார்கள்.மென்மையான தனுஷ் பெட்டரா,அரக்கத்தனமான தனுஷ் பெட்டரா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டியதில்லை. கதையின் தேவையை இருவருமே கவுரவித் திருக்கிறார்கள் .
“வீரா ,சூரா “என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்க ஸ்லோ மோஷனில் தனுஷ் நடந்து வருகிற காட்சியில் உணர்ச்சிவயப்படாதவன் தனுஷின் ரசிகனாகஇருக்க முடியாது.
சற்று கதைக்குள் பிரவேசிப்போம்.
மனைவி, மகளுடன் சந்தோஷமுடன் வாழ்கிறார் பிரபு. 13 வயதாகிய மகளின் போக்கில் திடீரென மாறுதல் .தனக்குத் தானே பேசிக்கொள்ளும் மகளின் போக்கினால் மனம் உடைகிறார் .படிப்பில் கவனம் இல்லை. இரவில் தனக்குத்தானே பேசிக்கொள்வதன் காரணம் என்ன?
மகளுக்காக போராடுகிறார்.மகளின் மாறுபட்ட போக்கில் இருந்து அவளை மீட்டாரா ,என்னதான் சிக்கல் ,இவைகளுக்கு அடிப்படையாக இருக்கும் காரணம் என்ன?
இயக்குநர் செல்வராகவன் அவரது பாணியில் ஹாரர் -திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்! கதை திரைக்கதை தனுஷ் .நல்லவேளை! பின்பாதி திரைக்கதை சொதப்பலுக்கு செல்வா காரணமில்லையாம்.!
இரண்டு தனுஷுகளுமே புதுமை காட்டி நடித்திருக்கிறார்கள்.சூப்பர்.!
தொடக்கத்தில் செல்வராகவன் நல்லவிதமாகவே நம்மை மிரட்டிவிட்டு மாயமாகிவிடுகிறார்.
இந்துஜா ரவிச்சந்திரன் தன்னுடைய கேரக்டரை அருமையுடன் உள்வாங்கி வெளிப்படுத்தி யிருக்கிறார்.
சிறுமி ஹியா தவே .பொறாமை வருகிறது.இந்த வயதிலேயே பலவித உணர்வுகளை வெகு சாதாரணமாக வெளிப்படுத்துகிறார். ஜூனியர் தனுஷ்களாக வருகிற இரட்டையர்கள் கதையோட்டத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
மனநோய் டாக்டராக வருகிற பிரபுவின் சேவை அதிகம் தேவைப்படவில்லை. கறிவேப்பில்லை மாதிரி யோகிபாபு.
முதல்பாதியை சுவையுடன் கொண்டு சென்ற செல்வராகவன் ,இரண்டாம் பாதியில் கவனம் செலுத்தவில்லை. தூக்க கலக்கத்தில் கடக்கிற உணர்வு. விவாதம் செய்ய வேண்டிய அளவுக்கு காடசிகள் இருக்கின்றன.கதிர் கேரக்டர் வெறும் கோரச்செயலுக்கு மட்டும் பயன்படுகிறதே தவிர அதன் உளவியல் பிரச்னை காட்டப்படவில்லை. காரணம் தெரியாமல் கடக்கிறது.
யுவனின் இசை உணர்வுகளை ஏற்படுத்துகிறது. காட்ச்சிகளுடன் ஒன்றிப்போகிறோம்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இயக்குநருக்கு பக்க பலம்.
ரசிகர்களின் பக்கபலம் தனுஷுக்கு இருக்கிறதா என்பதை காட்டுவதற்கு இந்த படம் உதவும்.!