வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி, இயக்கத்தில் ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பவுடர்”.
ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தமிழ் திரையுலகின் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் இயக்குநர் – திரைக்கதை எழுத்தாளர் – நடிகர் கே பாக்யராஜ் பேசுகையில், “ நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் “என்றார்.
இயக்குநர் வசந்த் பேசுகையில், “நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.”என்றார்
இயக்குநர் எழில் பேசுகையில், “எனக்கு நிகிலை அவர் பிஆர்ஓ ஆவதற்கு முன்பே தெரியும். எங்கள் நட்பு 23 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆடியோ மற்றும் திரைப்படம் தொடர்பான நிகழ்வுகளின் போது ஒரு பிஆர்ஓ-வாகவும், இப்போது பெரிய திரைகளில் நடிகராகவும் தனது வீரியத்தை காட்ட இருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள்.”என்றார் .
இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், “நிகில் ஒரு இயல்பான நடிகர் என்பது இந்தப் படத்தின் டிரைலரில் இருந்து தெரிகிறது. நிகில் தனது தொழிலில் அயராத அர்ப்பணிப்பை கொடுத்து, சரியான நம்பிக்கையைப் பெற்றுள்ளார். ஒரு வெற்றிகரமான நடிகராக அவர் பல மைல்கள் பயணிக்க உள்ளார், அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்.”என்றார்
மற்றும் இயக்குனர் சசி ,இயக்குநர் அறிவழகன் ,எஸ் ஆர் பிரபாகரன் ,தயாரிப்பாளர் சமீர், தயாரிப்பாளர் டி.சிவா .தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. குமார் ,அஜயன் பாலா ,பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்டி , நடிகர் ரோபோ ஷங்கர் ,ஒளிப்பதிவாளர் ராஜா , நடிகர் வையாபுரி ,நடிகர் பார்த்திபன் ,நடிகர் ஆதவன் ,நடிகை அனித்ரா நாயர் , தயாரிப்பாளர் மோகன்ராஜ் ,இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.
நடிகர் நிகில் முருகன்நன்றி தெரிவித்து பேசினார்.